திருநெல்வேலி:களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் இரவு பகலாக, ஒரு மாதமாக நடந்து வரும் சினிமா படப்பிடிப்பால், யானைகளின் வழித்தடம் மற்றும் நீர் வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் களக்காடு -முண்டந்துறை புலிகள் சரணாலயம் உள்ளது.
தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருகே மத்தளம்பாறை வனப்பகுதி, புலிகள் காப்பகத்தின் கீழ் உள்ளது.
அடர் வனப்பகுதியில், தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் என்ற சினிமா படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடப்பதால், அதற்காக அங்கு கோவில் கோபுரத்துடன் கூடிய கிராமச்சூழல் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணியர் மற்றும் கால்நடை மேய்ப்பாளர்களை கூட அனுமதிக்காத பகுதியில், தற்போது, பெரிய லாரிகளில் தளவாடப்பொருட்களை கொண்டு வந்து இறக்குகின்றனர்.
மின்சாரத்திற்காக ஜெனரேட்டர்களை இயக்கியும், சக்தி வாய்ந்த மின் விளக்குகளை பயன்படுத்தியும் இரவு, பகலாக, 'ஷூட்டிங்' நடக்கிறது. இதனால் அங்கு வசிக்கும் யானைகளின் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பழைய குற்றாலம், ஒப்பினாங்குளம், செங்குளம் கால்வாய் நீர்வரத்து பகுதிகள் படப்பிடிப்புக்காக சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், 15க்கும் மேற்பட்ட குளங்களில் நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராமநதி - ஜம்பு நதி இணைப்பு கால்வாய் திட்ட செயல்பாட்டுக்குழு அமைப்பாளர் ராம.உதயசூரியன், புலிகள் காப்பக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.
எனினும் படப்பிடிப்பு நிறுத்தப்படாமல் தொடர்கிறது.
களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகபிரியாவிடம் இது குறித்து கேட்க முயற்சித்த போது, அவர் பதில் அளிக்கவில்லை.