துாத்துக்குடி:கோவில்பட்டி அருகே கீழநம்பிபுரத்தில் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியரை அடித்து உதைத்த பெற்றோர், தாத்தாவை போலீசார் விசாரிக்கின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம், கீழநம்பிபுரத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகள் செல்வி, மருமகன் சிவலிங்கம். இவர்கள், செங்கல்பட்டு அருகே திருப்போரூரில் வசிக்கின்றனர்.
அவர்களது மகன் பிரகதீஷ், 7, தாத்தா முனியசாமி வீட்டில் வசிக்கிறார். பிரகதீஷ், அப்பகுதி ஹிந்து துவக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார்.
நேற்று முன்தினம் பள்ளியில் விளையாடிய போது, அவர் விழுந்துள்ளார். கவனமாக விளையாடும் படி ஆசிரியர் பாரத் சத்தமிட்டார்.
இது குறித்து அச்சிறுவன், ஆசிரியர் பாரத் அடித்ததாக, தாத்தா முனியசாமியிடம் கூறினார்.
முனியசாமி நேற்று காலை அவசர போலீஸ் எண் 100ல் புகார் தெரிவித்தார்.
போலீசார் பள்ளியில் விசாரித்து விட்டு, அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என கூறி சென்றனர்.
பின் முனியசாமி, சிவலிங்கம், செல்வி ஆகியோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியை குருவம்மாள், 60, ஆசிரியர் பாரத் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர்.
புகாரின்படி, முனியசாமி உள்ளிட்ட மூவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.