மேலுார் : மேலுார் கோட்டைப்பட்டி விலக்கருகே கல்லுாரி மாணவர் வாசுதேவன் 19, கொலை வழக்கில் 5 பேர் சரணடைந்தனர். 5 தலைமறைவாக உள்ளனர்.
மேலுார் அரசு கல்லுாரி இரண்டாம் ஆண்டு வணிகவியல் மாணவர் கம்பாளிபட்டி வாசுதேவன். நேற்று முன்தினம் சக நண்பர் பாலகண்ணனுடன் டூவீலரில் சென்றபோது நான்குவழிச்சாலையில் 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கொலை செய்தது. பாலகண்ணன் சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் நேற்று வஞ்சிநகரம் வி.ஏ.ஓ., கல்யாணிமுத்துவிடம் மேலுார் பிரேம்குமார் 22, சுதர்சன் 20, கஸ்துாரிபாய் நகர் வீரா 19, சரவண புகழ் 25, முத்தமிழ் நகர் தனுஷ் 20, ஆகியோர் சரணடைந்தனர். 5 பேர் தலைமறைவாக உள்ளனர்.
இதற்கிடையே நேற்றுமுன்தினம் வாசுதேவன் உடலுடன் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கம்பாளிபட்டி குமார் 45, அழகேசன் 34, முருகன் 48, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
பிப்.,18ல் கம்பாளிபட்டி அருகே இடவாபாறை வாழைகருப்பு சுவாமி கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியில் மதுபோதையில் பிரேம்குமார் தரப்புக்கும், கம்பாளிபட்டி கதிரவன், உறவினர் வாசுதேவன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன்னை தாக்கிய வாசுதேவனை பழிவாங்க பிரேம்குமார் திட்டமிட்டார்.
இதையறிந்த வாசுதேவன் கல்லுாரிக்கு 20 நாட்களாக வரவில்லை. சில நாட்களாக அவர் கல்லுாரிக்கு வந்து செல்வதை அறிந்த பிரேம்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தார். இவ்வாறு கூறினர்.