சோழவந்தான்: சோழவந்தான் அருகே நாச்சிக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் பெய்த கோடை ஆலங்கட்டி மழையால் நெற்பயிர்கள் சேதமாகிவிட்டது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
கருப்பட்டி, இரும்பாடி, கீழநாச்சிகுளம், மேலநாச்சிக்குளம், பாலகிருஷ்ணாபுரம் பகுதிகளில் 800 ஏக்கரில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் நெல் பயிரிட்டனர்.
நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது. நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் 400 ஏக்கருக்கும் மேல் நெற்கதிர்கள் உதிர்த்து, தண்ணீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கினர்.
விவசாயி ஹக்கீம் கூறியதாவது:
இங்கு இரண்டாம் போக மகசூலுக்காக 3 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து பயிரிட்டேன். நாளை அறுவடை தருணத்தில் நேற்று பெய்த மழையால் பயிர்கள் மடிந்து நெல்மணிகள் உதிர்ந்து விட்டது. நெற் பயிர் மட்டும் உதிர்ந்து வைக்கோல் நிற்பதை பார்த்து திகைத்து விட்டேன், என்றார்.
விவசாய சங்க தலைவர் ரமேஷ் கூறியதாவது:
இப்பகுதியில் 1000 ஏக்கருக்கு மேல் இரண்டாம் போக சாகுபடியில் நெல் பயிரிட்டனர். ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில், கொள்முதல் மையம் அமைக்கும் பணியை தீவிரப் படுத்தினோம். இந்நிலையில் திடீரென பெய்த மழையால் 500 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர் பாழானது, என்றார்.
வி.ஏ.ஓ., கார்த்திக், தலையாரி சரவணகுமார், வேளாண் உதவி அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் சேதமடைந்த நிலங்களை பார்வையிட்டனர். விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க கலெக்டர் அனீஷ்சேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.