மதுரை : விவசாயிகளின் நலனுக்காக கடந்த தேர்தலின் போது தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை வேளாண் பட்ஜெட்டில் காணவில்லை. நெல், கரும்புக்கு தகுந்த விலையில்லை. மதுரையில் வேளாண் பல்கலை அமைக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி உறுதி கூறிய நிலையில் அதுபற்றிய அறிவிப்பையும் காணோம். மொத்தத்தில் வேளாண் பட்ஜெட் வேதனை பட்ஜெட்டாக உள்ளது என்கின்றனர் மதுரை மாவட்ட விவசாயிகள். அவர்கள் கூறியதாவது:
வேளாண் பல்கலை என்னவானது
பெருமாள், தேசிய துணைத் தலைவர், பாரதிய கிசான் சங்கம், சோழவந்தான்
தி.மு.க., அரசின் தேர்தல் அறிக்கையில் அனைத்து விவசாய பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கப்படும்; ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய மேம்பாட்டு கவுன்சில் அமைக்கப்படும்; ஒவ்வொரு ஒன்றியத்திலும் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது பற்றி அறிவிப்பு இடம்பெறாதது ஏமாற்றம் தருகிறது. மதுரையில் வேளாண் பல்கலை அமைப்போம் என்ற வாக்குறுதியும் காணாமல் போனது. தனிநபர் வேளாண் பயிர் காப்பீடு, காவேரி குண்டாறு நதி நீர் இணைப்பு, வைகை அணை துார்வாருவது, சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. தேனியில் வாழை அபிவிருத்திக்காக ரூ.130 கோடி ஒதுக்கியதை வரவேற்கிறோம்.
நெல்ஜெயராமன் திட்டம் வரவேற்கத்தக்கது
கணேசன், இயற்கை விவசாயி, பெருங்காமநல்லூர்
மரபுசார் நெல் ரகங்களை பரவலாக்க நெல் ஜெயராமன் பெயரில் அறிமுகபடுத்தப்பட்ட திட்டம் வரவேற்கதக்கது. 100 வேளாண்மை குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரித்தல், விற்பனை செய்தல், பயிற்சி அளித்து வட்டார அளவில் விற்பனை மையங்களை ஏற்படுத்தும் முயற்சி போன்றவை இயற்கை விவசாய முறைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியாக இருக்கும். இயற்கை விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயித்து சந்தைபடுத்த கொள்கை மற்றும் ஆலோசனைகள் மட்டுமே உள்ளது. நடைமுறைபடுத்த வாய்ப்புகளை உருவாக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இயற்கை விவசாயிக்கு ஒன்றும் இல்லை
சுப்புராஜ், இயற்கை விவசாயி, திருமங்கலம்
இயற்கை விவசாயிகளுக்கு பெரிதாக எந்த அறிவிப்பும் இல்லை. மொத்த வேளாண் பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்துக்கு ஒதுக்கியுள்ள அளவு மிக மிக சொற்பம் தான். இதை 38 மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கினால் சில லட்சங்கள் தான் வரும். அரசு வழங்கும் உரம், மருந்து இடுபொருட்களை பயன்படுத்த அச்சமாக உள்ளது. அதற்கு பதிலாக நாட்டுமாடு வழங்குவது, தொழுவம் அமைப்பது, இயற்கை உரங்களை நாங்களே தயாரிப்பதற்கு மானியம் வழங்க வேண்டும். ஆர்க்கானிக் என்ற பெயரில் திசை திருப்பியதை தவிர ஆக்கப்பூர்வமான தீர்வு கிடைக்கவில்லை. கட்டமைப்பு, நிதி, ஆலோசனை வழங்கப்படவில்லை. உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்ய என்ன ஏற்பாடு செய்துள்ளோம் என்பதும் இல்லை.
வெறும் காகித பட்ஜெட் தான்
ராமன், பெரியாறு வைகை திருமங்கலம் பாசன கால்வாய் கோட்டத் தலைவர், உசிலம்பட்டி
நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2500; கரும்பு டன்னுக்கு ரூ.4000 குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி எங்கே போனது. இந்த வாக்குறுதியை நம்பித்தான் லட்சக்கணக்கான விவசாயிகள் ஓட்டளித்தனர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கடந்தாண்டிலும் ஏமாற்றத்தை சந்தித்தோம். இந்தாண்டு பட்ஜெட்டிலும் அதுபற்றிய அறிவிப்பு வரவில்லை. விவசாயிகள் வேதனையிலும் கோபத்திலும் உள்ளனர். வெறும் காகித பட்ஜெட்டாக ஏமாற்றம் தருகிறது.
சர்க்கரை ஆலை திறப்பு அறிவிப்பில்லை
அருணாச்சலம், உறுப்பினர், பெரியாறு ஒருபோக விவசாயிகள் சங்கம், மேலுார்
கரும்புக்கு டன்னுக்கு ரூ.195 ஊக்கத்தொகை கண்துடைப்பு அறிவிப்பு தான். மதுரை அலங்காநல்லுார் சர்க்கரை ஆலை நான்காண்டுகளாக பூட்டி கிடக்கிறது. திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. ஆலை இல்லாததாலேயே கரும்பு சாகுபடியை விட்டு விட்டோம். மதுரை மல்லிகைக்கு ரூ.7 கோடி ஒதுக்கி அதை கற்றுத்தருவது பயிற்சி அளிப்பது வரவேற்கத்தக்கது. முன்னோடி விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வது நல்ல விஷயம் தான். ஆனால் கட்சிக்காரர்களை அழைத்துச் செல்லாமல் உண்மையான விவசாயிகளை அழைத்துச் செல்வதை உறுதிசெய்ய வேண்டும்.
எல்லாவகையிலும் சிறந்த பட்ஜெட்
மாரிச்சாமி, நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர், மாடக்குளம்
எல்லா விவசாயத்துக்கும் நிதி ஒதுக்கியுள்ளனர். இது வரவேற்கத்தக்கது. எல்லா விவசாயிகளையும் ஊக்கப்படுத்துவது போலிருக்கிறது. வேளாண்மையின் மகத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொள்ள பண்ணை சுற்றுலாவுக்கு நிதி ஒதுக்கியதையும், வெளிநாடுகளுக்கு விவசாயிகளை அழைத்து செல்வதையும் பாராட்டலாம். விவசாயம் அழிந்து வரும் நிலையில் இதுபோன்ற தனி பட்ஜெட் விவசாயிகளை வாழவைக்கும். நாவல்பழம் சீசனுக்கு மட்டும் தான் கிடைக்கிறது. மருத்துவ குணம் நிறைந்த இந்த பழம் ஆண்டுதோறும் கிடைப்பது போன்ற கண்டுபிடிப்புக்கு நிதி ஒதுக்கியிருக்கலாம்.
இதைத்தான் எதிர்பார்த்தோம்
ரெங்கநாதன், மல்லிகை விவசாயி, மஞ்சம்பட்டி
40 ஆண்டுகளாக மல்லிகை சாகுபடி செய்து வருகிறோம். 20 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நாற்றுகளை நட்டபோது பூக்கள் உற்பத்தி அதிகமாக இருந்தது. தற்போது கிடைக்கும் நாற்றுகளின் தரமும் சரியில்லை. பூ உற்பத்தியும் குறைவாக உள்ளது. இந்த நிலையில் தரமான மல்லிகை நாற்றுகளை உற்பத்தி செய்ய ராமநாதபுரத்தில் ஏற்பாடு செய்வதை சந்தோஷத்துடன் வரவேற்கிறோம். பருவமில்லா காலத்தில் நாங்கள் பூக்களை உற்பத்தி செய்கிறோம். அதை மற்றவர்களுக்கும் கற்று கொடுப்பது நல்லது. ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். அதேபோல விற்பனையில் இடைத்தரகர் இன்றி சந்தை வாய்ப்பை உருவாக்கினால் எங்கள் லாபம் சிந்தாமல் சிதறாமல் எங்களுக்கே கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.