மதுரை : ''உலக வாழ்க்கை பிரச்னைகளில் இருந்து நிவர்த்தி பெற பகவத்கீதை உதவுகிறது'' என, ஆன்மிக சொற்பொழிவில் சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி பேசினார்.
மதுரை கல்லுாரியில் லலிதாம்பிகா அறக்கட்டளை சார்பில் பகவத்கீதை சொற்பொழிவு நடந்தது. கல்லுாரி முதல்வர்ராஜேந்திரன் தலைமை வகித்தார். பேராசிரியர்முரளி வரவேற்றார். பேராசிரியர்கள் நடராஜன், முத்துக்குமார் பேசினர்.
இதில் சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி பேசியதாவது:
வாழ்க்கை இருவகையாக உள்ளது. பறித்து உண்ணும்வாழ்க்கை. பகிர்ந்து உண்ணும் வாழ்க்கை. நாம் பகிர்ந்து உண்போராகஇருக்க வேண்டும். கண்முன் நிற்கும் தாய், தந்தையரே இறைவன்.இயங்கும் எல்லாவற்றுக்கும் அச்சாரமாக, இருந்து நம்மை இயக்குபவன் இறைவன். ஈஸ்வரன் என்பது ஆன்மா. அது நம்முள் இருக்கக்கூடியது. எல்லா அறிவியலும் பொருளை அடிப்படையாகக் கொண்டது.
சாஸ்திரம் என்றால் அறிவியல். அறிவு சார்ந்தவற்றுக்கு விடுதலை கொடுப்பதே சாஸ்திரம். மகிழ்ச்சியாக இருக்க ஏதேனும் வேண்டும் என்பது பிரவர்த்தி மார்க்கம். எதுவும் வேண்டாம் என்பது நிவர்த்தி மார்க்கம்.இரண்டையும் தேடுபவனுக்கு ஒருபோதும் மகிழ்ச்சி கிடையாது.
பகவத்கீதை, வாழ்க்கை பிரச்னைகளில்இருந்து நிவர்த்திபெற உதவுகிறது. நாம் மனதாலும்,பேச்சாலும் பிறருக்கு துன்பம் கொடுக்காமல் இருப்பதே ஞானம். ஆன்மாவை அறிந்து கொள்ள ஞானம், கல்வி, உடல், புத்தி தேவை.
இந்த உலகம் பொய்யானது. இந்த உலகம் நிரந்தரமற்றது. எது நிரந்தரமோ அது நிலை இல்லாதது. இந்த உலகை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் ஞானம் வேண்டும். அது கீதையில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.