மதுரை : வேளாண் பட்ஜெட்டில்இயற்கை விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி, யானை பசிக்கு சோளப்பொரி கொடுப்பதை போலிருக்கிறது என, தமிழக இயற்கை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
ஆயிரக்கணக்கான விவசாயிகள் நஞ்சில்லா சாகுபடிக்கு திரும்பி கொண்டிருக்கிறோம். மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கருங்குறுவை, நொறுங்கன் போன்ற பாரம்பரிய நெல் ரகங்களை நிறைய பேர் இயற்கை முறையில் சாகுபடி செய்கிறோம். அறுவடைக்கு பின் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் பரிதவிக்கிறோம்.
சன்னரகம், மோட்டா ரக நெல்லை அரசு நெல் கொள்முதல் மையம் மூலம் வாங்குகிறது. இதுபோன்ற பாரம்பரிய நெல்லை விற்பதற்கு மாவட்டந்தோறும் பிரத்யேக நெல் கொள்முதல் மையம் தனியாக அமைத்திருக்கலாம். நிலத்தின் வாடகை, இயற்கையை நேசித்து இயற்கை இடுபொருட்களை சுயமாக உருவாக்கி நஞ்சிலா சாகுபடி செய்யும் எங்களது ஒட்டுமொத்த உழைப்பு யாருக்கும் தெரியவில்லை.
வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின்மூலம் மாவட்டந்தோறும்உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. அவற்றில் ரசாயன உரம் மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறிகளுக்கு என கமிட்டி மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிப்பு பலகையில் எழுதப்படுகிறது.
நாங்கள் விளைவிக்கும் நஞ்சில்லா காய்கறி, பழங்களை வாங்குவதற்கு அதிகாரிகள் தயாராக இல்லை. ரசாயன உரத்தில் விளைந்ததை விட எங்களது காய்கறிகளுக்கு கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலை கூடுதலாக வைத்து விற்றால் கூட நிம்மதியடைவோம். அதை அரசின் செவிகளுக்கு எடுத்துச் சொல்ல அதிகாரிகளுக்கு மனமில்லை.
உழவர் சந்தையில் இயற்கை காய்கறிகளுக்கு மட்டும் தனியாக சில கடைகளை ஒதுக்கி விலை நிர்ணயம் செய்தால் மக்கள்தாராளமாக வாங்க முன்வருவார்கள். இதற்கு ஏற்பாடு செய்திருக்கலாம்.
தமிழகத்தில் இருந்து ஆடு, மாடுகளின் சாணத்தை டன் கணக்கில் கேரளாவிற்கு கொண்டு செல்கின்றனர். இதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் கேரளாவில் இருந்து ஒரு கையளவு கூட இயற்கை இடுபொருட்களை அரசு அதிகாரிகள் அனுமதியின்றி கொண்டு வரமுடியாது.
அவர்கள் இயற்கை உரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழக அரசு இங்கேயும் நடைமுறைப்படுத்தகூடாதா.
ஆடு, மாடு வளர்ப்பவர்களை ஒருங்கிணைத்து மாட்டுச்சாணம், ஆட்டுபுழுக்கையை மொத்தமாக வாங்கி தேவைப்படும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கலாம். மாவட்டத்திற்கு 2 இடங்களில் இதுபோன்று குழு அமைத்தால் ஆடு, மாடு வளர்ப்பவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆடு, மாடுகளும் பெருகும். இதன் மூலம் இயற்கையாகவே மண்வளம் அதிகரிக்கும்.
அரசு வழங்கும் உரம், மருந்து இடுபொருட்களை பயன்படுத்த அச்சமாக உள்ளது. இயற்கை இடுபொருட்களை பொறுத்தவரையில் பயன்படுத்துவதில் நிறைய சவால்கள் உள்ளன. நாட்டு மாடு வாங்குவதற்கு தனியாக மானியம் வழங்க வேண்டும்.
இயற்கை விவசாயிகளுக்கு பெரிதாக எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில்இல்லை. மொத்த வேளாண் பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்துக்கு ஒதுக்கியுள்ள அளவு மிக மிக சொற்பம் தான்.
இதை 38 மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கினால் சில லட்சங்கள் தான் வரும். மொத்தத்தில்யானைப் பசிக்கு சோளப்பொரி கொடுத்தது போலிருக்கிறது இந்த பட்ஜெட் என்றனர்.