கோவைக்கென, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல திட்டங்களும், பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டவை; இவை எதுவும் இப்போதைக்கு நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை. அது மட்டுமின்றி, மிகவும் அத்தியாவசியமான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவே இல்லை.
வரும் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், கோவைக்கு சில திட்டங்களை தமிழக அரசு அறிவித்து, அதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல திட்டங்கள், பல ஆண்டுகளாக பல முறை அறிவிக்கப்பட்டு, வாக்குறுதி தரப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மெட்ரோ - மறுஒலிபரப்பு
கடந்த 2011ம் ஆண்டில், இந்தியாவின் 19 இரண்டாம் நிலை நகரங்களை, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தேர்வு செய்தது. அப்போது காங்., தலைமையிலான மத்திய கூட்டணி அமைச்சரவையில், தி.மு.க.,வும்இடம் பெற்றிருந்தது. ஆனால் இத்திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டும், மத்திய அரசால் கோவை மெட்ரோ திட்டத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.
அதே நேரத்தில், அப்போது கேரளாவில் காங்., அரசு இருந்ததால், அறிவிப்பு வெளியான அடுத்த ஆண்டிலேயே கொச்சி மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் துவக்கி வைத்து, மத்திய அரசின்நிதிப்பங்களிப்பாக ரூ.1000 கோடி நிதியை ஒதுக்கினார். இதனால், பணிகள் துவங்கி முடிந்து, நான்காண்டுகளுக்கு முன்பே கொச்சி மெட்ரோ ரயில் இயங்கத்துவங்கிவிட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு என்று காலம் கடத்தப்பட்டது. திட்ட அறிக்கை தயாரானபோதே, சட்டசபையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அ.தி.மு.க., அரசாலும் அறிவிக்கப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கப்படவில்லை. அதேபோன்று, இப்போதும், 9,000 கோடி ரூபாய் மதிப்பில், கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்று சொல்லப்படவே இல்லை.
உண்மையாகச் சொல்வதென்றால், இதை 'மறு ஒலிபரப்பு' என்று சொல்லும் அளவுக்குதான், மறு அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதியாண்டில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு, எவ்வளவு காலத்தில் பணிகள் துவங்கும், திட்டத்தில் முதல் பகுதி எப்போது முடிக்கப்படும் என்பது குறித்து எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.
செம்மொழிப் பூங்கா - சிதறு தேங்கா!
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள கோவை செம்மொழிப் பூங்கா திட்டம், மிகவும் கேலிக்கூத்தான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. 2010ல் தி.மு.க., ஆட்சியின் இறுதிக்காலத்தில், இலங்கையில் நடந்த தமிழர் படுகொலைக்கு தி.மு.க., அரசு துணை போனதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்தது.
அதற்கு நிவாரணம் தேடும் வகையில், கோவையில் அவசர கதியில் செம்மொழி மாநாட்டை அன்றைய தி.மு.க., அரசு நடத்தியது. அந்த மாநாட்டில்தான், அன்றைய முதல்வர் கருணாநிதி, இந்த செம்மொழிப் பூங்கா திட்டத்தை அறிவித்தார். அதன் பின், ஆட்சிக்காலம் முடியும்வரை, அதற்கு சிறு துரும்பையும் அசைக்கவில்லை.
வழக்கம்போல, தி.மு.க., அறிவித்த திட்டம் என்பதால், பத்தாண்டு அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்து, ஓராண்டுக்கு மேலாகியும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த எந்த துரித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. இப்போது முதல் பகுதிக்கு ரூ.43 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் இந்த ஆண்டுக்குள் செயல்படுத்தப்படுமா என்பது சந்தேகம்தான்.
பை பாஸ் திட்டத்துக்கு பை பை!
இவற்றைத் தவிர்த்து, தொழில்பேட்டை, தொழில் நகரம் என பல்வேறு நகரங்களுக்கான திட்டங்களும் கோவைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த அரசால் அறிவிக்கப்பட்ட அன்னுார் டிட்கோ தொழிற்பேட்டை திட்டத்துக்கே, இப்போது வரை நிலத்தைக் கையகப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், புதிய தொழில்பேட்டை, தொழில் நகரங்களுக்கு எங்கே இடம் தேடுவார்கள் என்பது புரியாத புதிராகவுள்ளது.
ஆனால் கோவை மாவட்டத்தின் மிக அத்தியாவசியமான தேவைகளாகவுள்ள பல திட்டங்களை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை. குறிப்பாக, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி நகரங்களுக்கு பை பாஸ் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை, இந்த அரசு ஏற்கவே இல்லை.
அதிலும் முக்கியமாக, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மேட்டுப்பாளையம் பை பாஸ் அமைப்பதற்கு, மாநில நெடுஞ்சாலைத்துறை எல்லாப்பணிகளையும் முடித்து விட்ட நிலையில், அத்திட்டத்தை தி.மு.க.,அரசுதான் சமீபத்தில் கைவிட்டது. பி.ஏ.பி., திட்டத்தில் ஆனைமலையாறு - நல்லாறு அணைகள் கட்ட வேண்டும், ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்பது, பல ஆண்டு கால கோரிக்கை; அவற்றைப் பற்றி, பட்ஜெட்டில் ஒரு வார்த்தையும் இடம்பெறவில்லை.
பொள்ளாச்சியில் 'காயர் கிளஸ்டர்' அமைப்பது தொடர்பாக எந்த நிதி ஒதுக்கீடும் இல்லை. நெல், கரும்புக்கு ஊக்கத் தொகை வழங்குவது போல, கொப்பரைக்கு கிலோவுக்கு ரூ.20 ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென்ற தென்னை விவசாயிகளின் கோரிக்கைக்கும் இந்த பட்ஜெட்டில் எந்த பதிலும் இல்லை.
சூலுாரில் பறக்கும் மேம்பாலம், பம்ப்செட் தொழில் ஆராய்ச்சி மையம், பொள்ளாச்சியில் தொழில்பயிற்சி மையம் ஆகிய திட்டங்கள் உட்பட, கடந்த சட்டசபை தேர்தலின்போது, கோவைக்கு 47 வாக்குறுதிகளை தி.மு.க. , கொடுத்தது. அவற்றில் 10 திட்டங்களுக்குக் கூட, இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை.
-நமது சிறப்பு நிருபர்-