கடந்த சட்டசபை தேர்தலில் அக்கட்சி மொத்தமாக, 30 லட்சத்து, 43 ஆயிரத்து 657 ஓட்டுக்களை பெற்றுள்ளது. திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் மட்டும், 48 ஆயிரம் ஓட்டுக்களை பெற்றார்.
மாதவரம், செங்கல்பட்டு, பூந்தமல்லி, திருவாரூர் தொகுதிகள் ஒவ்வொன்றிலும், 25 ஆயிரம் ஓட்டுக்களுக்கு கூடுதலாக, அக்கட்சிக்கு கிடைத்தது. ஆவடி, சோழிங்கநல்லுார், துாத்துக்குடி தொகுதிகளில், 30 ஆயிரம் ஓட்டுக்களுக்கு மேலாக, அக்கட்சி வேட்பாளர்கள் பெற்றனர்.
அதேபோல், 14 தொகுதிகளில், 20 ஆயிரம்; 36 தொகுதிகளில் 15 ஆயிரம்; 100 தொகுதிகளில் 10 ஆயிரம் ஓட்டுக்கள் வீதம் பெற்றுள்ளது. அ.தி.மு.க., ஆட்சி அமைப்பதை தடுத்ததே, இந்த ஓட்டுக்கள் தான் என, பழனிசாமி தரப்பினர் கருதுகின்றனர்.
வரும் லோக்சபா தேர்தலில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா போன்றவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது. அப்போது, அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கியில் கணிசமான பங்கை, அவர்கள் கைப்பற்றி விடுவர்.
அதற்கு ஈடுசெய்ய சீமானை சேர்க்கலாம் என, தென் மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர் விரும்புகின்றனர். அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தால், லோக்சபா தேர்தல் மட்டுமின்றி, 2026 சட்டசபை தேர்தலுக்கும் கை கொடுக்கும் என்றும், அ.தி.மு.க., தலைமை கருதுகிறது.
இந்நிலையில், பழனிசாமியின் குடும்ப உறுப்பினர் ஒருவரும், நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி ஒருவரும் ரகசிய பேச்சு நடத்திய தகவல் தெரியவந்துள்ளது.
- நமது நிருபர் -