திருப்பூர்: ஹோலி பண்டிகையை முன்னிட்டு சொந்த மாநிலம் சென்ற வடமாநில தொழிலாளர்கள் பலர் திருப்பூர் திரும்ப துவங்கியுள்ளனர்.
திருப்பூரில் கடந்த மாதம் வடமாநிலத்தவர் குறித்தும், அவர்களது செயல்பாடுகள் குறித்து தேவையற்ற, பிரச்னை கிளப்பும் வகையிலான வீடியோக்கள் வதந்தியாக பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்த போலீசார், இச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூருக்கு வந்த, டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேரில் ஆய்வு செய்து, வடமாநிலத்தவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தார். இம்மாதம், 5ம் தேதி கோவை - பீகார் இடையே கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
இந்த சிறப்பு ரயிலில், 1,350 வடமாநிலத்தவர் ஹோலி பண்டிகை கொண்டாட தங்கள் சொந்த மாநிலங்களுக்கு பயணமாகினர்.
பண்டிகை கொண்டாட்டம் முடிந்ததுடன், திருப்பூரில் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல், இயல்பு நிலை நிலவுதால், சொந்த மாநிலம் சென்ற பலரும் ரயிலில் திருப்பூர் திரும்ப துவங்கியுள்ளனர்.திருப்பூர் வழியாக பயணிக்கும் பல்வேறு தினசரி, வாராந்திர ரயில்களில் அதிகளவில் வடமாநிலத்தவர் திருப்பூர் நோக்கி வந்து கொண்டுள்ளனர்.