கோவை: தமிழக வேளாண் பட்ஜெட், வெறும் அறிவிப்புகளால் நிறைந்திருக்கிறது. ஆனால், விவசாயிகளுக்கு ஏதுமில்லை என, உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
தேர்தல் அறிக்கையைப் போல, ஏராளமான அறிவிப்புகள் நிறைந்த பட்ஜெட். ஆண்டறிக்கை வாசிப்பதைப் போல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் எதிர்பார்த்த கரும்புக்கு 4,000 ரூபாய், நெல்லுக்கு 2,500 ரூபாய் அறிவிக்கப்படவில்லை. தக்காளி, வெங்காயத்துக்கு விலை கிடைக்க நடவடிக்கை இல்லை.
இன்று (மார்ச் 21) ஒட்டன்சத்திரம் சந்தையில், விவசாயிகளிடம் தக்காளி பறிக்கவோ, கொண்டுவரவோ வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அந்த அளவுக்கு விலை சரிந்து விட்டது.
வெங்காயம், தக்காளியைப் பயிரிட ஊக்குவிக்க பணம் ஒதுக்கும் அரசு, அவற்றை சந்தைப்படுத்தி போதுமான விலை கிடைக்கச் செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
அத்தனை அறிவிப்புகளும் விவசாய பொருட்களை உற்பத்தி செய்ய ஊக்குவிப்பதாக மட்டுமே அமைந்துள்ளதே தவிர, விளைபொருட்களுக்கு விலை கிடைக்க நடவடிக்கை இல்லை.
வேளாண் தொழிலுக்கு வணிக வங்கிகளில் பெற்ற கடன் தொடர்பாக அறிவிப்பு ஏதும் இல்லை. எனவே, விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக இது உள்ளது. சில அறிவிப்புகள் ஏற்கெனவே நடந்து கொண்டிருப்பவைதான்.
வெளியில் இருந்து பார்ப்போருக்கு, இந்த பட்ஜெட்டில் விவசாயத்துக்கு கொட்டிக் கொடுத்தது போல தெரியும். உண்மையில் களத்து மேட்டுக்கு வந்து சேரும் அறிவிப்பு ஒன்றுமே இல்லை.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.