திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், ஏ.டி.எம்., கொள்ளையில் ஈடுபட்டு கைதான ஐந்து பேரை, போலீசார் நான்கு நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூரில், பிப்., 12-ல் நான்கு ஏ.டி.எம்.,களில், 73 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.
கொள்ளையில் ஈடுபட்ட ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஆரிப், 35, ஆசாத், 36, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குதரத்பாஷா, 43, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்சர் உசேன், 26, நிஜாமுதீன், 37, மற்றும் கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் உட்பட ஏழு பேரை இதுவரை கைது செய்து, 5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
கொள்ளையர்கள் ஐந்து பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார், போளூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
மாஜிஸ்திரேட் காளிமுத்துவேல், நேற்று முன்தினம் மாலை, கொள்ளையர்கள் ஐந்து பேரையும், நான்கு நாள் காவலில் விசாரிக்க அனுமதியளித்தார்.
இதையடுத்து, ஐந்து பேரையும் போளூரில் வைத்து கொள்ளையடித்த, 68 லட்சம் ரூபாயை எங்கு பதுக்கி வைத்துள்ளனர் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.