மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு துறையில் சாதிப்பது தொடர்பான விழிப்புணர்வு, இன்னும் எண்ணற்றோரை எட்ட வேண்டும். காரணம், விளையாட்டுக்களில் மாற்றுத்திறனாளிகளை வழி நடத்த பலரும் முன் வருவதில்லை. பெண்கள் மாற்றுத்திறனாளியாக இருப்பின், தாழ்வு மனப்பான்மைக்குள் அடைபட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கிவிடுகிறார்கள். அன்றாட வாழ்வாதாரத்துக்காக, தங்களுக்கு கிடைத்த சிறு சிறு வேலைகளைச் செய்து கொண்டு கனவுகளை சிதைத்துக்கொள்கிறார்கள்.
40 பேருக்கு பயிற்சி
தாங்கள் வாழ்வதே ஒரு சிக்கலாக இருக்கும் நிலையில், இந்த சமூகத்தில் தங்களுக்கு ஏற்ற துறையினை தேர்வு செய்து அதில் சாதித்து, தங்களை அடையாளப்படுத்திக்கொள்வது என்பது நடக்காத காரியமெனக்கருதி நாட்களை கடத்தத் துவங்கிவிடுகிறார்கள். இதிலிருந்து அவர்களை மீட்டு வெளியுலகிற்கு அடையாளம் காட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். கடந்த, 2019 ஆண்டு முதல், பெண் மாற்றுத்திறனாளிகளை அவர்கள் விரும்பிய துறையில் சாதனையாளர்களாக உருவாக்கும் நோக்கில், 40 பேரை தேர்வு செய்து விளையாட்டில் ஈடுபடுத்தியுள்ளோம்.
கடந்த சில ஆண்டுகளாக பாரா ஒலிம்பிக்கில் பல மாற்றங்களும், முன்னேற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன. நகர்ப்புறங்களில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வு அதிகமுள்ளது. சமூக வலைதளங்களின் வாயிலாக மாற்றுத்திறனாளிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அங்கீகாரம்
கிராமப்புற மாற்றுத்திறனாளிகளுக்கும் பாரா ஒலிம்பிக் பற்றிய விழிப்புணர்வை கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம். அங்கு வசிக்கும் பலர், அடிப்படை பயிற்சி எடுக்க வாய்ப்பில்லாத போதும் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று பயிற்சியின் அவசியம் குறித்து அறிந்து கொள்கின்றனர். அதன்பின் முறையான பயிற்சியுடன் பங்கேற்று சாதிக்கவும் செய்கின்றனர். தற்போது பள்ளிகள், சிறப்பு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டு மாற்றுத்திறனாளி மாணவர்களின் தனித்திறன்கள் வெளியுலகிற்கு கொண்டுவரப்படுகின்றன. புதிது, புதிதாக மாற்றுத்திறனாளி வீரர்கள் அடையாளம் காணப்பட்டு அங்கீகாரம் பெறுகின்றனர்.
இருப்பினும், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் பயிற்சி பெறுவதற்கான பிரத்யேக மைதானங்கள், பயிற்சிக்கூட வளாகங்கள் எந்த மாவட்டத்திலும் இல்லை என்பது, மிகப்பெரிய குறையன்றி வேறில்லை. அதுபற்றி சிந்திக்கவும் யாருமில்லை என்பதுதான் வேதனை தரக்கூடியது. மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சியாளர்களும் இல்லை; பயிற்சி உபகரணங்களுமில்லை. இதுபற்றி மத்திய, மாநில விளையாட்டுத்துறை அமைச்சகங்கள், பெரு நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் சிந்தித்து மாற்றுத்திறனாளி சமூகத்தின் மறுமலர்ச்சிக்கும் அவர்தம் விளையாட்டு ஆர்வத்துக்கும் அடித்தளம் இட வேண்டும்.
ஊக்கத்தொகை
ஒரு மாற்றுத்திறனாளி விளையாட்டில் சாதிக்க முன்வந்தால் அவர்களுக்கான பயணவசதி, சத்தான உணவு, ஊக்கத்தொகை ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான், தாங்களும் விளையாட்டில் சாதனை புரிவதற்கான வாய்ப்புக் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்ற நம்பிக்கை மாற்றுத்திறனாளிகள் மத்தியில் துளிர்க்கும்.
ஒரு மாற்றுத்திறனாளி வீரர் அல்லது வீராங்கனை, தனது திறமையை நிரூபித்தால் மட்டுமே அவர்களை அங்கீகரித்து தேவையான சலுகைகளை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்கிறது. மற்ற மாநிலங்களை போல் தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவித்து, பயிற்சி அளித்து, மேம்படுத்த அரசுத்துறைகள் எதுவும் முயற்சிப்பதில்லை என்பதுதான் வருத்தம்.
பயிற்சி மையம்
சிறப்பு குழந்தைகளுக்கான சிறப்பு பாரா ஒலிம்பிக்ஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ், பார்வையற்றோருக்கான ஒலிம்பிக்ஸ், காது கேளாத வாய் பேச முடியாதவர்களுக்கான, 'சைலன்ட்' ஒலிம்பிக்ஸ் என பல வகை போட்டிகள் உள்ளன. ஆனால், அடிப்படை பயிற்சியே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் எவ்வாறு ஏழ்மை நிலையில், ஆதரவற்று இருக்கும் மாற்றுத்திறனாளி தன் திறமையை வெளிக்காட்ட முடியும்?
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அரசு முன் வந்து விளையாட்டு மையத்தை உருவாக்கி அதில் மாற்றுத்திறனாளிகள் தங்கி பயிற்சி பெற ஊக்குவித்தால், தீபா மாலிக், மாரியப்பன் தங்கவேலு போன்ற இன்னும் எண்ணற்ற சாதனையாளர்கள் உருவாவார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், 'தமிழ்நாடு பாரா ஸ்போர்ட்ஸ் அகாடமி'யில் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சி மையம் நடத்தப்படுகிறது. அரசு, தனியார் நிறுவனங்கள், அரிமா மற்றும் ரோட்டரி போன்ற சங்கங்கள் மனது வைத்தால் எல்லா மாவட்டத்திலும் ஒருங்கிணைந்த தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சி மையம் உருவாக்கி மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகளை ஊக்குவிக்க முடியும்.