ஈரோடு: தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் குறித்து, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள், தங்கள் கருத்து, எதிர்பார்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
என்.சிவநேசன், உதவி தலைவர், வேளாண் பட்டதாரிகள் ஆலோசனை மற்றும் சேவை மையம்: நடப்பாண்டு உணவு தானிய உற்பத்தி, 127 லட்சம் மெட்ரிக் டன் என்பது தன்னிறைவை தரும். மின்னணு வேளாண்மை மூலமும், உழவன் செயலி மூலம், 22 சேவையை நேரடியாக வழங்குவதாக அறிவித்ததால், இடைத்தரகர் மற்றும் சிரமங்கள் குறையும். சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க செய்யும் முயற்சி நல்ல பலன் தரும்.
அனைத்து கிராமங்களையும் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் இணைத்து, கடன், பயிர் காப்பீடு, இடுபொருள், வளர்ச்சி திட்டம், மின்சாரம், விற்பனை வாய்ப்பு அளிப்பதாக கூறியதால், விவசாயம் வளர்ச்சி பெறும்.
பருத்தி தேவையை அதிகரிக்கவும், தமிழகத்துக்கு தேவையான பருத்தியை இங்கேயே உற்பத்தி செய்ய இலக்கு உருவாக்கப்படும் என்பதால், ஜவுளித்துறை மேம்படும். ஈரோட்டில் உணவு பதப்படுத்தும் ஆலைகள், நிறுவனங்கள் ஏற்படுத்தவும், செயலற்று உள்ள மஞ்சள் ஆராய்ச்சி மையம், மஞ்சள் ஏற்றுமதி மையத்தின் செயல்பாட்டை துரிதப்படுத்த நடவடிக்கை இல்லை.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் ஏ.எம்.முனுசாமி: எஸ்.சி., எஸ்.டி., விவசாயிகளுக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து, மின் இணைப்பு தரும் அறிவிப்பை வரவேற்கிறோம். அதேநேரம், அவர்களது பயிர்களை வனவிலங்குகளிடம் இருந்து காப்பது பற்றி ஏதும் கூறவில்லை. வீட்டுக்கு, 2 தென்னங்கன்று வழங்குவது சிறந்தது. ஆனால், கொப்பரை கொள்முதல், உரிய விலைக்கும் உத்தரவாதம் தரவில்லை. தக்காளி உள்ளிட்ட காய்கறி விளைச்சலை அதிகரிக்க முயற்சிப்பதாக கூறினர். எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைப்படி உற்பத்தி செலவில், 50 சதவீதத்துக்கு பதில்,
கேரளாவில், 20 சதவீதம் உயர்த்தி அரசே கொள்முதல் செய்கிறது. விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளை காக்க அறிவிப்பு இல்லை. கரும்பு டன்னுக்கு, 4,000 ரூபாய், நெல் குவிண்டால், 3,000 ரூபாய் தருவதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து, 2 ஆண்டு ஆகியும் அறிவிக்கவில்லை. கரும்புக்கு வருவாய் பங்கீட்டு முறையை ரத்து செய்வோம் என தேர்தல் வாக்குறுதியில் கூறி, பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்து, பாதுகாத்து வைக்க ஏற்பாடு இல்லை. கட்டுமான வசதி பற்றி அறிவிப்பு இல்லை.
மதுரை மல்லிகை மேம்பாட்டுக்கு, 7 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் சத்தி, கோபி பகுதியில் மல்லிகை, சென்டுமல்லி, 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைவிக்கப்படுகிறது. விலை ஏறி, இறங்குவதை சீராக்க உத்தரவாதம், சென்ட் தயாரிப்பு
ஆலை உருவாக்க அறிவிப்பு இல்லை.
சுபி.தளபதி, தலைவர் கொடிவேரி அணை பவானி நதி பாசன விவசாயிகள் சங்கம்: கடந்த, 2021ல் பவானிசாகரில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அறிவித்து, 2 கோடி ரூபாய் ஒதுக்கி செயல் இழந்து கிடக்கிறது. ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்துக்கு பல கோடி ரூபாய் ஒதுக்கி, திட்டம் என்ன ஆனதென தெரியவில்லை. குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் குடிமராமத்து பணி செய்யவும், வண்டல் மண் அள்ள அறிவிப்பு இல்லை. கள்ளத்தனமாக மண் எடுக்க அனுமதி தருவதை தடுக்க முயற்சி இல்லை. முப்போகம் விளையும் ஆயக்கட்டுகளான காளிங்கராயன், கொடிவேரி பாசனங்களில் வீட்டுமனை,
தொழிலகங்கள் அதிகரிப்பதை தடுக்காமல், ரியல் எஸ்டேட் செய்வோருக்கு அரசு துணை போவதை தடுக்க திட்டம் அறிவிக்கவில்லை.
செ.நல்லசாமி, செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு: கடந்த வேளாண் பட்ஜெட்டில், 33,000 கோடியும், தற்போது, 39,000 கோடி ரூபாயும் ஒதுக்கி உள்ளனர். இதில், 6,553 கோடி ரூபாய் இலவச மின்சாரத்துக்கு போகிறது. மேலும் பல கோடி ரூபாய் மானியம், இலவச அறிவிப்புக்கு சென்றுள்ளது. 10 லட்சம் பயனாளிகளுக்கு தென்னங்கன்று வழங்குவதை வரவேற்கலாம். தேங்காய், கொப்பரை தேங்காய்க்கு விலை இல்லை. தேங்காய் எண்ணெயை, ரேஷனில் மலிவு விலையில் வழங்க அறிவிப்பு இல்லை.
நெல் குவிண்டாலுக்கு சன்னரகம், 100 ரூபாய், மோட்டா ரகத்துக்கு, 75 ரூபாய் ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளனர். இதை தவிர்த்து அரசின், 49 வேளாண் பண்ணையில் நெல்லை உற்பத்தி செய்து, உற்பத்தி செலவைவிட கூடுதல் தொகை வழங்கினால் மட்டுமே விவசாயம் சிறப்படையும். தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறி விளைச்சல் மேம்பட திட்டம் அறிவித்தாலும், விளை பொருட்களின் விலை நிர்ணயத்துக்கு எந்த அறிவிப்பும் செய்யவில்லை. பனை பொருள் மேம்பாட்டுக்கு, 2 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது கேலிக்கூத்தானது. கள் இறக்க அனுமதி தரவில்லை.
பி.கே.தெய்வசிகாமணி, தலைவர், அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம்: நெல்லுக்கு அதிக விலை தந்துள்ளனர். மேலும் உயர்த்தி வழங்கி இருக்கலாம். கரும்புக்கு போதிய விலை அறிவிக்காதது ஏமாற்றம். குறைந்த காலத்தில், 1.50 லட்சம் பேருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கி உள்ளதை வரவேற்கிறோம். மழை வளத்துக்காக பல்வேறு மரங்கள், காய்கறிகள் விதைப்பை ஊக்கப்படுத்துவது வரவேற்புக்குரியது. வனவிலங்குகளின் தொல்லை, தாக்குதல் அதிகமாக உள்ளதால், அதை தடுக்க குழு அமைத்துள்ளது சிறந்தது.
கே.ஆர்.சுதந்திரராசு, மாநில தலைவர், தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கம்: ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு வேளாண் விஞ்ஞானி, சிறந்த உற்பத்தியுடன் அதிக விளைச்சல் காணும் விவசாயிக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு, சிறு தானியங்களை அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யும் அறிவிப்பு வரவேற்புக்கு உரியது. புதிய வேளாண் இயந்திரங்களுக்கான மானியம் வழங்குவதால், விவசாயம் இயந்திரமயமாகும். அதேநேரம், நீர் நிலைகளை துார்வார திட்டம், அறிவிப்பு, நிதி ஒதுக்கீடு இல்லை. விவசாய பரப்பு அதிகரிப்பு, விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயத்துக்கு வழி, கூடுதலாக சில பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை போன்ற திட்டங்கள் இல்லை. விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு விற்பனை செய்வதை தடுக்கவும், விவசாயத்துடன் இணைந்த கால்நடை வளர்ப்பு போன்றவற்றை ஊக்குவிக்க
திட்டம் ஏதுமில்லை.