ஈரோடு: ஈரோடு, பழையபாளையத்தில், மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. தலைமை ஆசிரியையாக அமுதா மற்றும் இரு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். கொரோனா பரவலுக்கு முன், 130க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்தனர். தற்போது, 26 பேர் மட்டுமே படிக்கின்றனர்.
அமுதா முறையாக பள்ளிக்கு செல்லாத நிலையில், அவரது கணவரான ஓய்வு பெற்ற ஆசிரியர் பாபு, தலைமை ஆசிரியர் போல அதிகாரம் செய்துள்ளார். இதை கண்டித்து பெற்றோர் ஆசிரியர் கழக தலைவி சாந்தி தலைமையில், பெற்றோர்கள் சிலர் பள்ளிைய நேற்று முற்றுகையிட்டனர். இவர்களுடன் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தங்கமுத்து, ஜெகதீசனும் சேர்ந்து கொண்டனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது: தலைமை ஆசிரியை அமுதா, முறையாக பாடம் நடத்துவதில்லை. பள்ளி நேரத்தில் உடல் நலக்குறைவு என்று வகுப்பறையில் துாங்கி விடுகிறார். இவரது கணவர் பாபு, தலைமை ஆசிரியர் போல், பள்ளி ஆசிரியர்களை அதிகாரம் செய்கிறார். தலைமை ஆசிரியரை நீக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தகவலறிந்த ஈரோடு தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, சூரம்பட்டி போலீசார், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து ஜோதி சந்திரா கூறியதாவது: தலைமையாசிரியை உடல் நலக்குறைவு ஏற்பட்டு பணி செய்ய தகுதி இல்லாதவராக இருக்கிறார். இரு மாதத்துக்கு முன்பே, மருத்துவ விடுப்பில் செல்ல அறிவுறுத்தினோம். அவரின் கணவர் பள்ளிக்குள் அதிகாரம் செய்திருப்பது தவறு. அமுதா கட்டாய ஓய்வில் செல்வதாக கூறியுள்ளார்.
அப்படி செல்லவில்லையேல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினர்.
இதை தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தால் பள்ளியில் வகுப்பு நடக்கவில்லை. தலைமை ஆசிரியை, அவரது கணவரும் வீட்டுக்கு கிளம்பி சென்றனர்.