ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில்களின், குண்டம் மற்றும் தேர்த்திருவிழா, பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
ஈரோடு மாநகரின் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் கோவில் மற்றும் அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன் மற்றும் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில், குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதன்படி நடப்பாண்டு பெரியமாரியம்மன் வகையறா கோவில்களின் திருவிழா, நேற்றிரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
முன்னதாக பெரிய மாரியம்மனுக்கு பால், பஞ்சாமிர்தம், இளநீர், தேன், மஞ்சள், பன்னீர் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. இதை தொடர்ந்து இரவு, 9:௦௦ மணியளவில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தரிசனத்துக்கு வந்த பக்தர்கள், அம்மனுக்கு பல்வேறு வகையான பூக்களை வைத்து வழிபட்டனர். பூச்சாட்டுதல் விழாவையொட்டி, பெரிய மாரியம்மன் கோவில், பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல் சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களிலும், பூச்சாட்டுதல் நடந்தது. இவ்விழாக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், வரிசை யில் காத்திருந்து, அம்மனை தரிசித்தனர். பூச்சாட்டுதலை தொடர்ந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர்.