மது விற்றவர் கைது
536 பாட்டில் பறிமுதல்
ஈரோடு: ஈரோடு மதுவிலக்கு எஸ்.ஐ., செந்தில் தலைமையில், கருங்கல்பாளையம் சின்னப்பா லே-அவுட் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு ஒரு குடோனில் மது விற்பதை கண்டுபிடித்தனர். அங்கு நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர். குடோனில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 536 மதுபாட்டில்களை கைப்பற்றினர். இது தொடர்பாக கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு. ஜெயகோபால் வீதியை சேர்ந்த கணேசன், 57, என்பவரை கைது செய்தனர்.
சங்கத்துக்கு போலி பதிவு;
சலவையாளர்கள் முறையீடு
ஈரோடு: சலவையாளர்கள் சங்கம் சார்பில், நிர்வாகிகள் கணேசன், செல்வன், தங்கவேலு உள்ளிட்டோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
கருங்கல்பாளையம், விநாயகர் கோவில் வீதியில் சலவையாளர் சங்கம் செயல்படுகிறது. சங்கத்துக்கு சொந்தமான இடம், 6,750 சதுரடி பதிவு செய்து, 50 ஆண்டாக செயல்படுகிறது. ஈரோடு மாவட்ட கூட்டுறவு சலவை சாலை
சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில், 1,200 உறுப்பினர்கள் உள்ளனர். தலைவர்,
இயக்குனர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு தெரியாமல் சங்கத்தில் கிளை சங்கம் துவங்கி, மாற்று பெயராக ஈரோடு வண்ணார் சமுதாய நலச்சங்கம் என வைத்து, அவ்விடத்தை பத்திர பதிவு, பட்டா மாறுதல், சொத்து வரி, மின் இணைப்பு என அனைத்தையும் மாற்றம் செய்துள்ளனர். இந்த போலியான பதிவு ஆவணத்தை ரத்து செய்து, ஏற்கனவே உறுப்பினர்களை கொண்டு செயல்படும், எங்கள் அமைப்புக்கு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
அரசு இசைப்பள்ளி
சார்பில் தமிழிசை விழா
ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளி சார்பில் தமிழிசை விழா, 23ம் ஆண்டு விழா மற்றும் பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பரிசளித்து பேசினார். இசைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு கலை மற்றும் விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. இந்தாண்டு, 17 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு, 30 பேருக்கு பரிசு, பாராட்டு சான்று வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
குலதெய்வ கோவிலில்
மின்சாரம் தாக்கி பக்தர் பலி
தாராபுரம்: குலதெய்வ கோவிலில், டியூப்லைட்டை கையில் பிடித்தபடி, மொபைலில் படம் எடுத்த பக்தர், மின்சாரம் தாக்கியதில் இறந்தார்.
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி, ராஜிவ்காந்தி முதல் வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 58; இவரது குலதெய்வ கோவிலான, தாராபுரம், கோட்டைமேடு வீரேஸ்வர சுவாமி கோவிலுக்கு, விசேஷ தினங்களில் சுவாமி கும்பிட வருவார். பங்குனி அமாவாசை தினமான நேற்று தரிசனத்துக்கு வந்திருந்தார்.
சிதிலமடைந்த கோவிலை புகைப்படம் எடுப்பதற்காக, டியூப் லைட்டை எரிய வைத்து, கையில் பிடித்தபடி, மொபைல்போனில் புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக டியூப் லைட்டில் இருந்து மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டார். அங்கிருந்தோர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.
டாக்டர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பக்தி சொற்பொழிவு
ஈரோட்டில் துவக்கம்
பெருந்துறை: ஈரோட்டில், பெருந்துறை ரோடு, பரிமளம் மஹாலில், ஸ்ரீமத் பாகவதம் என்னும் கிருஷ்ண கதை பக்தி சொற்பொழிவு, 20ம் தேதி தொடங்கியது. 26ம் தேதி வரை நடக்கவுள்ளது. தினமும் மாலை, 5:30 மணி முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.
வியாசாரால் எழுதப்பட்ட 18 ஆயிரம் பாடல்களில், தசாவதார கதைகள், கிருஷ்ணனின் சரித்திரம் மற்றும் லீலைகள் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. சுகமுனிவர் பரீட்சித்து மன்னனுக்கு இதை உபதேசித்தார். மஹாரண்ய முரளீதர சுவாமிகள், சொற்பொழிவு ஆற்றி வருகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குளோபல் ஆர்கனைசேசன் பார் டிவினிட்டி இந்திய அமைப்பு நிர்வாகிகள் செய்துள்ளனர்.
காமதேனு கலை கல்லுாரியில் விளையாட்டு விழா
ஈரோடு: சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், 22வது விளையாட்டு விழா கல்லுாரியில் நடந்தது.
கல்லுாரி நிறுவன தலைவர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். கல்லுாரி செயலர் அருந்ததி, இணை செயலர் மலர்செல்வி, கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
சத்தியமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், முருகேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். விழாவை கொடியேற்றி தொடங்கி வைத்து, மாணவ -- மாணவியரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டனர். இதை தொடர்ந்து மாணவ, மாணவியரின் சிலம்பம் மற்றும் சிறப்பு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ராதிகா, விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தார். பேராசிரியர் கனிமொழி நன்றி கூறினார். கல்லுாரி உடற்கல்வி இயக்குனர்கள், அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவ, -மாணவியர் கலந்து கொண்டனர்.
நெடுஞ்சாலை துறை பணியாளர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு: தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில், ஈரோடு, மூலப்பாளையத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர்
அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலை பணியாளர்கள், 300க்கும் மேற்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
*தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வலியுறுத்தி, கோபியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்ட தலைவர் தர்மலிங்கம், கோட்ட செயலாளர் பாலமுருகன், முன்னாள் மாநில பொருளாளர் குணசேகரன், துணை தலைவர் நாகராஜன், துணை செயலாளர் குப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொரோனா பாதிப்பு சிகிச்சையில் 7 பேர்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டு
வருகிறது.
நேற்று ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு, ஒருவர் குணமடைந்தார். நேற்றைய நிலையில் ஏழு பேர் கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ளனர்.
பண்ணாரி கோவில் பூச்சாட்டு விழா
சத்தியமங்கலம், மார்ச் 22-
பண்ணாரி அம்மன் கோவில், குண்டம் விழா பூச்சாட்டு நேற்று விமர்சையாக நடந்தது.
சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் பூச்சாட்டு விழா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதை தொடர்ந்து பண்ணாரி கோவிலில் நேற்று அதிகாலை பூச்சாட்டுதல் விழா நடந்தது. இதையொட்டி பண்ணாரியம்மன் உற்சவ மூர்த்தி, சருகு மாரியம்மன், சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்டு கோவிலிலிருந்து புறப்பட்டது. சிக்கரசம்பாளையத்தை நள்ளிரவில் அடைந்தது. இதை தொடர்ந்து பல்வேறு கிராமங்களுக்கு திருவீதி உலாவாக கொண்டு
செல்லப்படும்.