கரூர்: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, நீர் நிலைகள் மாசுபடுவதை தவிர்க்க, வலியுறுத்தி, கரூரை சேர்ந்த பள்ளி மாணவர், துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஆண்டுதோறும் உலக தண்ணீர் தினம் மார்ச் 22ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளை ஒட்டி, தண்ணீர் மாசுபடுவதை தவிர்க்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கரூரில், தனியார் பள்ளி மாணவர், நேற்று, வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
கரூர் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டியை சேர்ந்த விஷ்வக் நித்தின், 14; வெங்கமேட்டில் உள்ள, தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், நீர்நிலைகளில் மனித கழிவு கலப்பதை தடுக்க வலியுறுத்தி, கரூர் அமராவதி ஆற்றை ஒட்டியுள்ள வீடுகளில், நேற்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இதுகுறித்து, மாணவர் விஷ்வக் நித்தின் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகள் இணைந்து, 'ஸ்வச் பாரத்' என்ற திட்டத்தின் கீழ், கழிப்பிடம் கட்ட, 12 ஆயிரம் ரூபாய் நிதி வழங்குகிறது. ஆனால், நீர் நிலைகளில் மனித கழிவுகள் கலக்கப்படுகிறது.
இதனால், உலகில் 200 கோடி பேருக்கு துாய்மையான குடிநீர் கிடைப்பதில்லை. துாய்மை இல்லாத குடிநீரை குடிப்பதால், ஓராண்டுக்கு பல லட்சக்கணக்கானோர்,
உயிரிழக்கின்றனர்.
உலகில் கடல் நீரை தவிர்த்து, மனிதர்கள் பயன்படுத்த கூடிய நிலத்தடி நீர், 2.5 சதவீதம் மட்டுமே உள்ளது. அதைதான், உலகம் முழுவதுமுள்ள 800 கோடி மக்களுக்கும் பயன்படுத்துகின்றனர். எனவே, நீர் நிலைகளில் மனித கழிவுகள், கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் காவிரியாற்று பகுதிகளான வாங்கல், நாமக்கல் மாவட்ட காவிரியாற்றின் கரையோர பகுதிகளான வேலுார், மோகனுாரிலும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மாணவர் விஷ்வக் நித்தினின் பெற்றோர், தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.