கரூர்: தமிழக சட்டசபையில், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நேற்று தாக்கல் செய்த, வேளாண் பட்ஜெட், விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா அல்லது ஏமாற்றம் அளித்ததா என்பது குறித்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ள கருத்துகள்:-
தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர விமல்நாதன்:
தமிழக வேளாண் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்க கூடியதாகவே உள்ளது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. நீண்ட காலமாக காத்திருக்கும் மூன்று லட்சம் உழவர்களுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. வாழை உழவர்கள் நலன் கருதி சத்துணவில் நாள்தோறும் வாழைப்பழங்கள் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில், உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பாமாயில் வழங்குவதை தவிர்த்துவிட்டு, தென்னை உழவர்களின் நலன் கருதி, தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும். மலர்கள், பழங்கள் சாகுபடி செய்பவர்களுக்கு எவ்வித பாரபட்சமும் இல்லாமல் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவித்து, முக்கொம்புக்கும் அணைக்கரைக்கும் இடையே ஏழு இடங்களில் கதவணை அமைக்கும் அறிவிப்பை, எதிர்பார்த்து ஏமாந்துள்ளோம். சிறுதானிய உழவர்களை ஊக்குவிப்பதற்கான அறிவிப்பு, எள், நிலக்கடலை, சூரியகாந்தி எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க, நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம்.
காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர், மகாதானபுரம் ராஜாராம்:
முந்திரி, பலா, முருங்கை, பனை, வெள்ளரி, மிளகாய், செங்கரும்பு, கோதுமை, சிறுதானியங்கள், தென்னை என, தமிழகத்தில் விளையும் பயிர்களுக்கு, பாதுகாப்பு உயர் விளைச்சல் தொழில்நுட்பம் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு பின் பயிர் சாகுபடி ஊக்கப்படுத்தப்படும் போன்ற அறிவிப்புகளை வரவேற்கலாம்.
உணவு பதப்படுத்துதலுக்கு தனி கொள்கை உருவாக்கப்படும், கழிவிலிருந்து அங்கக உரம் தயாரிக்க முன்னுரிமை அளிக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை ஏற்கலாம். ஆனால், விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்த, விளைபொருட்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதார விலை வெற்று அறிவிப்பாகவே உள்ளது. நடைமுறையில் திருப்திகரமாக இல்லை. அனைத்து மாவட்டங்களிலும் உழவர் விவாத குழு, ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வட்டாரத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி, 3 அல்லது 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் என்பதற்கு பதிலாக, உழவர் விவாத குழுவை, கிராம வேளாண்மை முன்னேற்ற குழுவாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். இல்லையெனில், விவசாயிகளின் எண்ணிக்கையை விட விவசாயிகளுக்கு பாடம் நடத்தும் விவசாய அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். இதற்கு ஒதுக்கப்படும் நிதி அதிகாரிகளின் சம்பளத்துக்கே சரியாகிவிடும்.
விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க மாவட்ட தலைவர், ஈசநத்தம் செல்வராஜ்:
வேளாண் பட்ஜெட்டில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில, 64 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் உள்ள அழகாபுரி அணையை துார் வார நிதி ஒதுக்கீடு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. கால்நடை துறைக்கு பெரிதாக அறிவிப்புகள் இல்லை. கிராமங்களுக்கு பவர் டில்லர் ஒதுக்கீடு பாராட்டுக்குரியது. ஆனால் இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லை. விவசாய உற்பத்தியாளர் குழுக்களுக்கு நிதி வழங்கியபோதும், அதை பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளது. விவசாய கூலி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பட்ஜெட்டில் போதிய அறிவிப்பு இல்லை.
காவிரி பாசன விவசாயிகள் சங்க
செயலாளர், கவுண்டம்பட்டி சுப்பிரமணி:
வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்வது வரவேற்கத்தக்கது. ஆனாலும், அந்தந்த மாவட்டங்களுக்கு தேவையான திட்டங்களை அறிவித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர், திருச்சி மாவட்ட எல்லைகளில் அதிக அளவில் மலர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் மலர்களிலிருந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும் என மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளிடையே நீண்டகாலமாக எதிர்பார்ப்பு உள்ளது. அது குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, தேர்தல் காலத்தில் அறிவித்தபடி இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.