கரூர்: கரூர் மாவட்டம், அப்பிபாளையம் அருகே உள்ள செட்டிபாளையத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. டி.ஆர்.ஓ., லியாகத் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின், அவர், கூறிதாவது: கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு, அலுவலர்கள் குழுவாக சென்று, கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியுடையவர்களுக்கு உரிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
அனைத்து அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் இந்த மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 45 பயனாளிகளுக்கு, 5.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், விதவை உதவித்தொகை, 18 பயனாளிகளுக்கு ரூ.2.16 லட்சம் மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, 4 பயனாளிகளுக்கு, 7.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், இலவச வீட்டு மனைப்பட்டா, 68 பயனாளிகளுக்கு 28.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் என, மொத்தம் 273 பயனாளிகளுக்கு 1.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி, ஆர்.டி.ஓ., ரூபினா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அன்புமணி, சப் - கலெக்டர் சைபுதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.