சத்தியமங்கலம்: தாசில்தார் அலுவலக வளாகம், மாலையில் திறந்தவெளி மது 'பாராக' மாறுவதாக, மக்கள் மத்தியில் வேதனை எழுந்துள்ளது.
சத்தியமங்கலத்தில் தாசில்தார் அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ளது. அலுவலக வளாகத்துக்குள் மணல், மண், கடத்திய லாரி, டிராக்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மாலை நேரங்களில் இங்கு வரும் குடிமகன்கள், வாகனங்களின் மறைவான பகுதியில் அமர்ந்து, மது குடித்து விட்டு காலி பாட்டில்களை உடைத்தும், வீசியும் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் மது வாடை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
பல்வேறு குறை மற்றும் கோரிக்கைகளுக்கு, மனு தர வரும் மக்கள், மது வாடை மற்றும் உடைந்து கிடக்கும் மது பாட்டில்களை பார்த்து, சந்தேகம் கொள்கின்றனர். ஒருவேளை அலுவலக ஊழியர்கள்தான் இதில் ஈடுபடுகின்றனரோ? என ஒரு சிலர் கருதுகின்றனர்.
மாலை வேளையில் அலுவலக வளாகம், திறந்தவெளி பாராக மாறுவது, அதிகாரிகளுக்கு தெரியாதா அல்லது அதுபற்றிய கவலை இல்லையா? என்பதுதான் ஆச்சர்யமாக உள்ளது.