குளித்தலை: குளித்தலை, சுங்ககேட்டில், கரூர், திருச்சி பஸ்கள் நிற்கும் இடத்தில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தை போதை நபர்கள் ஆக்கிரமித்ததால், சுகாதார கேடு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.
குளித்தலை, சுங்ககேட்டில், கரூர் பஸ் நிறுத்தம் நிழற்கூடம் அருகே, டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இங்கு குடிமகன்கள், மது அருந்திவிட்டு, போதையில் அருகில் உள்ள நிழற்கூடத்துக்கு வந்து, வாந்தி எடுத்து, சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல், கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் திருச்சி பஸ்கள் நிற்கும் இடத்தில் உள்ள நிழற்கூடத்தில் குடிமகன்கள், போதையில் ஆடைகள் கலைந்தும், தகாத வார்த்தைகள் பேசி, பஸ் பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
குளித்தலை சுங்ககேட்டில் இரண்டு நிழற்கூடங்களும், பஸ் பயணிகள் பயன்படுத்த முடியாத வகையில், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், பயணிகள் வெயில், மழையில் காத்திருந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன் கருதி, குளித்தலை நகராட்சி நிர்வாகம், நிழற்கூடத்தை துாய்மைப்படுத்தவும், மீண்டும் போதை ஆசாமிகள் அசுத்தம் செய்யாமல் இருக்க, குளித்தலை போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.