கரூர்: கரூர் மாநகராட்சி பகுதியில், பல இடங்களில் குழாய் உடைந்து, குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. உடைந்த குழாய்களை சீரமைத்து, கோடையில் தண்ணீர் வீணாவதை தடுக்காமல், மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
கரூர் மாநகராட்சிக்கு, காவிரியாற்றில், வாங்கல், கட்டளை பகுதிகளில் உள்ள குடிநீரேற்று நிலையங்கள் மூலம், குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு, 1,500 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, கரூர் மாநகராட்சி பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கரூர் மாநகராட்சியில், பல இடங்களில் குழாய் உடைந்து, குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது. ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்படும் நிலையில், குழாய் சேதத்தால், தண்ணீர் வீணாவதை தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பொதுக்
குழாய்களிலும், உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.
கரூர் கருப்பாயி கோவில் தெருவில், நேற்று, குழாய் உடைப்பால், பல மணி நேரம் தண்ணீர் வீணாக சாலையில் ஆறு போல் ஓடியது. இதேபோல், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வெளி பகுதியிலும், குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக கழிவுநீர் வடிகாலில் செல்கிறது.
குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் கோடை காலத்தில் குடிநீர் வீணாவதால், பொது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, கரூர் மாநகராட்சி பகுதியில் உடைந்த குடிநீர் குழாயை, உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.