மாட்டு வண்டி மீது லாரி
மோதல்: 2 பேர் படுகாயம்
கரூர் அருகே, மாட்டு வண்டி மீது லாரி மோதிய விபத்தில், இருவர் படுகாயமடைந்தனர்.
கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம், மோதுகாடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், 20; இவர் நேற்று, கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், மாட்டு வண்டியில், நண்பர் விஜய், 20; என்பவருடன் தளவாப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சியை சேர்ந்த ஷேக் அலாவுதீன், 49; என்பவர் ஓட்டி சென்ற லாரி, மாட்டு வண்டி மீது மோதியது. இதில், பிரபாகரன், விஜய் ஆகியோர் படுகாயமடைந்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாட்டு வண்டியில் பூட்டப்பட்டிருந்த இரண்டு மாடுகளும் காயமடைந்தன. வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவில்களில் அமாவாசை
சிறப்பு வழிபாடு
கிருஷ்ணராயபுரம்: பங்குனி அமாவாசையை ஒட்டி, மாயனுார் செல்லாண்டியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மாயனுார் காவிரி ஆற்றங்கரையில் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. அமாவாசையை ஒட்டி இந்த கோவிலில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கரூர், மாயனுார் சுற்று வட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல், சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் மலர் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், சிந்தலவாடி லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி பகுதி மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.
மது, கள் விற்ற
11 பேர் கைது
கரூர் : கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மதுபானம், கள் விற்றதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்.ஐ., அழகுராம் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், கரூர் டவுன், பாலவிடுதி, சிந்தாமணிப்பட்டி, வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சட்ட விரோதமாக மதுபானம், கள் விற்றதாக நாகபெருமாள், 39; ராஜா, 26; மாரியம்மாள், 46; ரவி, 49; மகேந்திரன், 58; தமிழரசன், 25; காமராஜ், 55; சாமிநாதன், 40; முருகேசன், 50; முனியப்பன், 48; நாகம்மாள், 80; ஆகிய 11 பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 138 மதுபாட்டில்கள், 23 லிட்டர் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மரவள்ளிக்கிழங்கு
சாகுபடி பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கணக்கம்பட்டி, அந்தரப்பட்டி, வயலுார், வீரியபாளையம் ஆகிய இடங்களில் விவசாயிகள், பரவலாக, மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். இவற்றுக்கு கிணற்று பாசனம் முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது கிழங்கு குச்சிகள் நடப்பட்டு, செடிகள் பசுமையாக வளர்ந்து வருகின்றன. மேலும், செடிகள் இடையே, களைகள் அதிகம் முளைப்பதால், தொழிலாளர்கள் மூலம் களை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிட்டுக்குருவி தின
உறுதிமொழி ஏற்பு
கரூர்: கரூர் மாவட்டம், கார்வாழி தொடக்கப்பள்ளியில், தேசிய பசுமைப்படை சார்பில், உலக சிட்டுக்குருவி தினத்தை ஒட்டி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன் தலைமை வகித்தார்.
ஆண்டுதோறும் மார்ச் 20ம் தேதி, சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சிட்டுக்குருவிகள் இனம், சமீப காலமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் வகையில் நாள்தோறும் அவை, வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவியருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள், 'சிட்டுகுருவிகளுக்கு தீங்கு ஏற்படுத்த மாட்டோம்' என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதன் பிறகு, சிட்டுக்குருவிகளுக்காக பள்ளி வளாக சுவற்றில் கம்பு, சோளம், தண்ணீர் வைத்தனர்.
பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணி மந்தம்
குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்டை, 74 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் பணி கடந்த மாதம் தொடங்கியது. இதற்காக பஸ் ஸ்டாண்டில் இருந்த நிழற்கூடம், தாய்மார்கள் பாலுாட்டும் அறை, வாடகை ஆட்டோ, கார் நிறுத்தம் ஆகியவற்றை அகற்றினர்.
தற்போது, பஸ் ஸ்டாண்டு மேம்படுத்தும் பணியை கிடப்பில் போட்டுள்ளனர். குளித்தலை பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகளான குடிநீர், நிழற்கூடம் ஆகியவை இல்லாததால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, குளித்தலை, பஸ் ஸ்டாண்டை மேம்படுத்தும் பணியை மீண்டும் தொடங்கி, பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.