சேதமடைந்த கழிப்பிடத்தை
சீரமைக்க வேண்டும்
கரூர்: கரூர் - மோகனுார் சாலை, வாங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கடந்த, சில ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கழிப்பிடம் பல மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. இதுகுறித்து, புகார் தெரிவித்தும், வாங்கல் பஞ்சாயத்து நிர்வாகம் சரி செய்யாமல், காலம் கடத்தி வருகிறது. இதனால், அப்பகுதியினர், திறந்தவெளி பகுதியை, கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், சுகாதார கேடு, தொற்று நோய் அபாயம் உள்ளது. எனவே, வாங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே, சேதமடைந்த கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும்.
இருளில் மூழ்கிய
திருமுக்கூடலுார் சாலை
கரூர்: கரூர் அருகே நெரூரில் இருந்து, திருமுக்கூடலுார் செல்லும் சாலை, பல கிராமங்கள் வழியாக செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் அதிக அளவில் விவசாய நிலங்கள் உள்ளன. ஆனால், அந்த சாலையில் பல
இடங்களில் மின் விளக்குகள் இல்லை. இதனால், நெரூர் வழியாக,
திருமுக்கூடலுார் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படு கின்றன. சாலையில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் உள்ளது. எனவே, நெரூர் முதல் திருமுக்கூடலுார் வரை, சாலையின் இருபுறமும் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
குப்பை தொட்டிகள்
இல்லாததால் சுகாதார கேடு
கரூர்: கரூர், காந்தி கிராமத்தில் பூங்கா அருகே குப்பை தொட்டி இல்லாததால் பொதுமக்கள் குப்பையை சாலையில் கொட்டி வருகின்றனர்.
கரூர், காந்தி கிராமம் பூங்கா அமைந்துள்ள பகுதியில், குப்பை சேகரிக்கும் வகையில் தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள், குப்பையை சாலையில் கொட்டி வருவதால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், குப்பையில் இருந்து துர்நாற்றமும் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, காந்தி கிராமம் பூங்கா பகுதி மற்றும் அருகாமை பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தரகம்பட்டியில்
விளைபொருள் கண்காட்சி
குளித்தலை, மார்ச் 22-
தரகம்பட்டியில், வேளாண் உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் மூலம், மரபுசார் விளைபொருள் கண்காட்சி நடந்தது.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்து அரசு திட்டங்கள் குறித்து பேசினார். கண்காட்சி அரங்குகளில், தங்கள் பகுதியில் விளையும் பாரம்பரிய நெல், பிற பயிர்களில் உள்ளூர் உயர் ரகங்களை விவசாயிகள் காட்சிப்படுத்தினர். நிகழ்ச்சியில் விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடந்தது.
இதில், கடவூர், கிருஷ்ணாயபுரம், குளித்தலை, தோகைமலை பகுதிக்கு உட்பட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.