ஓசூர்: ஓசூரில், ஈ.வெ.ராமசாமி பெயர் வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து, மாமன்ற கூட்டத்திலிருந்து, பா.ஜ., மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி கூட்டம், மேயர் சத்யா தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா முன்னிலை வகித்தனர்.
கூட்டம் துவங்கிய சிறிது நேரத்தில், பா.ஜ., கவுன்சிலர் பார்வதி, முனீஸ்வர் நகர் சர்க்கிள் பகுதி என்று உள்ளதை, ஈ.வெ.ராமசாமி சதுக்கம் என மாற்றி பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், 25வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் மல்லிகா, ஈ.வெ.ராமசாமி பெயருக்கு பதில், அம்பேக்தர் பெயர் வைக்கலாம் என, மேயர் சத்யாவிடம் மனு கொடுத்தார்.
பா.ஜ., கவுன்சிலர் பார்வதிக்கு ஆதரவாக, அ.தி.மு.க.,வினர் குரல் கொடுத்தனர். அப்போது, தனி நபர் கொடுத்த கடிதத்திற்காக, எப்படி பெயர் வைக்கலாம் என எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, பா.ஜ., கவுன்சிலர் பார்வதி, சுயேச்சை கவுன்சிலர் மல்லிகா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.