விருதுநகர்:விருதுநகரில் பாதியில் நிறுத்தப்பட்ட ரோடு ஒப்பந்த பணிக்கான தொகையை வழங்காததற்காக கலெக்டர் அலுவலக கட்டடத்தை ஜப்தி செய்ய 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டது.
மதுரையை சேர்ந்த சவரிமுத்து திருமங்கலம் - சாத்துார் டோல்கேட் வரை தேசிய நெடுஞ்சாலை என்.எச்.7 ஏ., ரோடு போடும் பணியை ஒப்பந்தம் எடுத்தார். முப்பது சதவீத பணிகள் முடிந்த நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டன.
செய்த பணிக்கான தொகை 78 லட்சம் ரூபாயை வழங்கக் கோரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நிலுவைத் தொகையை ஒப்பந்ததாரருக்கு வழங்க 2007ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை எதிர்த்து இருதரப்பும் அடுத்தடுத்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்றன.
கடந்த 2021ல் உச்ச நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பின்படி வட்டியுடன் நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்டது. அதன் பிறகும் நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை.
பின், 2022 ஆகஸ்டில் விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் 9 சதவீத வட்டியுடன், 2 கோடியே 35 லட்சத்து 2 ஆயிரத்து 208 ரூபாய் வழங்க உத்தரவிட்டது.
ஆனால், அந்தத் தொகையை இதுவரை வழங்கவில்லை. இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றுனர் தலைமையில் கலெக்டர் அலுவலகம், அதை ஒட்டியுள்ள இடத்தை பொது ஏலம் விட அறிவிப்பு செய்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
கூரைக்குண்டு ஊராட்சி அலுவலக அறிவிப்பு பலகைகளிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.