செங்கல்பட்டு:செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்கள், அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான திட்டப்பணிகளுக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு 10 கோடி ரூபாயும், கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்திற்கு 5 கோடி ரூபாயும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
செங்கல்பட்டு ரயில் நிலையம், சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பாதை மற்றும் செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் பாதை இணைந்த முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த ரயில் நிலையம், ஏ பிரிவு நிலையில் உள்ளது.
சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு 30 விரைவு ரயில்களும், 15 வாராந்திர விரைவு ரயில்களும், 19 சிறப்பு விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து செங்கல்பட்டுக்கு, 60 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இங்கிருந்து விரைவு மற்றும் மின்சார ரயில்களில், செங்கல்பட்டு நகரைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள், பல்வேறு தேவைகளுக்காக சென்று வருகின்றனர்.
ரயில் பயணியர் மூலம், தினமும் ௩ லட்சம் ரூபாய்க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஆண்டு வருமானமாக ௨ கோடி ரூபாய்க்கு மேல் கிடைக்கிறது.
ஆனால், ரயில் நிலையத்தில், லிப்ட் வசதி, ரயில்கள் வந்து செல்லும் நேர அட்டவணை, எட்டு நடைமேடைகளிலும் பெயர் பலகைகள் போன்ற வசதிகள் இல்லை.
உணவகம் இல்லாததால், பயணியர் வெளியில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இங்கு, பயணியர் வசதிக்காக, முதலுதவி சிகிச்சை அளிக்க, மருத்துவ மையம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நெடுநாட்களாக வைக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்திற்கு, தினமும் 2,000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் வருகின்றன.
இந்த வாகனங்கள் நிறுத்த, அடிக்குமாடி இருசக்கர வாகன நிறுத்தம் உட்பட, நான்கு வாகன நிறுத்தங்கள் உள்ளன. ஆனால், கூடுதலாக மேலும் ஒரு அடிக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும் எனவும், ரயில் நிலைய வளாகத்தில், அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் எனவும், பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, சென்னை ரயில்வே கோட்டத்தில், 15 ரயில் நிலையங்களில், மத்திய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் என்ற திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.
இத்திட்டத்திஙீழ், செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு, 10 கோடி ரூபாய் மதிப்பில், துாய்மை, சுகாதாரம், ரயில் நிலைய கட்டடங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட உள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், சென்னைக்கு அடுத்த கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில், அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில், 5 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இப்பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் 10 கோடி ரூபாயிலும், கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலும் மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்கான திட்டப்பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டு, பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளன.
- ரயில்வே துறை அதிகாரி, செங்கல்பட்டு.