திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், உலக தண்ணீர் தினத்தையொட்டி, சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த, ஊராட்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், கடந்த 17ம் தேதி உத்தரவிட்டார். அதையடுத்து, கிராம சபை கூட்டம் நடந்தது.
ஆலத்துார்
திருப்போரூர் ஒன்றியம், ஆலத்துார் ஊராட்சியில் அடங்கிய வெங்கலேரி கிராமத்தில், காலை 11:30 மணி அளவில், கிராம சபை கூட்டம் துவங்கியது.
ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது குற்றச்சாட்டு இருப்பதால், அவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதனால், மூத்த கவுன்சிலர் என்ற முறையில் சாவித்திரி தலைமையில், கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கிராம மக்கள் கூறியதாவது:
கூட்டத்திற்கு தலைவர் வரவில்லை. வாசிக்க வரவு- - செலவு கணக்கு இல்லை. பின் எதற்கு இந்த கூட்டம். இந்த கூட்டத்தை ரத்து செய்யுங்கள்.
ஊராட்சியை நிர்வகிக்கும் கட்டுப்பாட்டை பி.டி.ஓ.,க்கு மாற்றுங்கள். அடுத்த முறை நடக்கும் கூட்டத்தில் பற்றாளராக கலெக்டர் இருக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மணப்பாக்கம்
செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் ஊராட்சியில், தலைவர் ரஞ்சித் குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், மணப்பாக்கம் பகுதியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக செயல்பட வேண்டும் என, விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இம்மனுக்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் தெரிவித்தார்.
மாமல்லபுரம்
மாமல்லபுரத்தில் நடந்த கிராம சபையில், மழை நீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல் உள்ளிட்டவை குறித்து, ஊராட்சி நிர்வாகத்தினர் விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், ஜல் ஜீவன் திட்டத்தில் செயல்படுத்தப்படும் ஊராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விளக்கப்பட்டது.
கூடுவாஞ்சேரி
காட்டாங்கொளத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்ணிவாக்கம் ஊராட்சியில், நேற்று தலைவர் கெஜலட்சுமி தலைமையில், கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதேபோல், வண்டலுார் ஊராட்சி, நெடுங்குன்றம், வேங்கடமங்கலம், ஊனமாஞ்சேரி, நல்லம்பாக்கம், கீரப்பாக்கம், காயரம்பேடு, பெருமாட்டுநல்லுார், ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில், கிராம சபை கூட்டம் நடந்தது.
அச்சிறுபாக்கம்
அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் உள்ள 59 ஊராட்சிகளில், நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில், பாப்பநல்லுார் ஊராட்சியில், ஊராட்சி தலைவர் சத்தியவதி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, ஊரக வளர்ச்சி துறை கமிஷனர் தாரேஷ் அகமது பங்கேற்றார்.
இதில், தண்ணீர் வளங்களை ஏற்படுத்துதல், ஏரி, குளம் போன்றவற்றை ஆழப்படுத்துதல் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சோத்துப்பாக்கம்
சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோத்துப்பாக்கம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், அதிக அளவில் பெண்கள் பங்கேற்றனர்.
இதில், செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர், செய்யூர் வட்டாட்சியர் ஆகியோர் பங்கேற்றனர். ஊராட்சி தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
சுத்தமான குடிநீர் வினியோகம், நீர் ஆதாரத்தை பெருக்குதல் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.