திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் நேற்று உலக தண்ணீர் தினத்தையொட்டி, கிராம சபை கூட்டம் நடந்தது.
வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், பாண்டேஸ்வரம் ஊராட்சியில் நடந்த கிராம சபையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, மின்சாரம் குறித்த வினியோகம் செய்வதில்லை. போதிய பேருந்து வசதியில்லை. வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கிராம சபையில் பங்கேற்ற மக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
திருத்தணி ஒன்றியத்தில், சபை கூட்டம் நடந்தது. இதில் அலமேலுமங்காபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபையில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், திருத்தணி தாசில்தார் வெண்ணிலா, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், கால்நடை உதவி மருத்துவர் கீதா ஆகியோர் கலந்துக் கொண்டனர். பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.
பொன்னேரி
மீஞ்சூர் ஒன்றியத்தில், 55 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூடுவாஞ்சேரி ஊராட்சியில் ஏரி, குளம், குட்டை கள் துார்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும். அனுப்பம்பட்டு ஊராட்சியில் நீர்நிலை பகுதிகளை முழுமையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்.
கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில், 'ஜல்ஜீவன்' இயக்கத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும்.
அப்போது பெண்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து குடிநீர் வழங்க வேண்டும் என வாக்குவாதம் செய்தனர்.
கடம்பத்துார் ஊராட்சியில் நடந்த கிராம சபையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் பங்கேற்று, மொபைல்போனுக்கு வங்கி தொடர்பாக வரும் குறுஞ்செய்திகளுக்கு எவ்வித பதிலும் அளிக்க கூடாது என அறிவுறுத்தினார்
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், 38 ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடந்தது. தண்ணீர் பாதுகாப்பு மற்றும் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதே போல், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில், 33 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில், 61 ஊராட்சிகளில், கிராம சபை கூட்டம் நடந்தன.
இதில், புதிய நீர் ஆதாரங்களை ஏற்படுத்த வேண்டும், மாதம் இரு முறை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.