கோவை: திருமண தகவல் மையம் மூலம் பழகி, தனியார் வங்கி பெண் மேலாளரிடம் ரூ.19.50 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்தவர், 26 வயது இளம்பெண், திருமணமாகாதவர். இவர், கோவையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார். இவருக்கு, திருமண தகவல் மையம் மூலம் ஒரு வாலிபர் அறிமுகமானார். அவர் தனது பெயர் ஜாபர் இப்ராஹிம், அமெரிக்காவில் டாக்டராக பணி புரிவதாக தெரிவித்தார். இந்நிலையில், ஜாபர் இப்ராஹிம், தான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து அவரை பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம், செல்போனில் அந்த வாலிபர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டார்.
அப்போது அவர் டெல்லி விமான நிலையத்தில் உள்ளதாகவும், தன்னிடம், ரூ.5 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அதனை இந்திய பணமாக மாற்ற ரூ.19.50 லட்சம் வரியாக செலுத்த வேண்டும் எனவும், கோவை வந்து அந்த பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். இளம்பெண் அந்த நபர் சொன்ன வங்கி கணக்கில், ரூ.19.50 லட்சம் செலுத்தினார். அதன் பின் ஜாபர் இப்ராஹிம் கோவைக்கு வரவில்லை. மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதுகுறித்து, அந்த இளம்பெண் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.