கோவை: கோவை சூலுாரிலுள்ள பெருமாள் மற்றும் ஈஸ்வரன் கோவில்களுக்குச் சொந்தமான, 210 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, டிஜிட்டல் தொழில் நுட்ப முறையில் அளவீடு செய்யும் பணி நடக்கிறது.
கோவையை அடுத்த சூலுார் திருவேங்கடநாத பெருமாள் கோவிலுக்கு, சூலுார், கண்ணம்பாளையம், பருவாய், இச்சிப்பட்டி உள்ளிட்ட 12 கிராமங்களில் 136 ஏக்கர் நிலங்கள் உள்ளன.
வைத்தியநாதசுவாமி கோவிலுக்கு 74.78 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்நிலங்கள் விவசாயிகளிடமும், தனிநபர்களிடமும் ஆக்கிரமிப்பிலிருந்தன. இவற்றை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சமீபத்தில் மீட்டனர்.
மீட்கப்பட்ட 210.78 ஏக்கர் நிலங்களில் சில நன்செய் மற்றும் புன்செய் ஆகும். இவை அனைத்தும் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரோவர் இயந்திரம் பயன்படுத்தி அளவீடு செய்யப்படுகின்றன.
நிலத்தை எளிதில் அடையாளம் காணும் வகையில், 'எச்.ஆர்.சி.இ.,' என்று சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்ட கான்கிரீட் கற்கள் நடப்படுகின்றன.
இது குறித்து ஹிந்துசமய அறநிலையத்துறையினர் கூறுகையில், 'கோவிலுக்கு சொந்தமான இடம் என அடையாளப்படுத்துவதற்காகவும், யாரும் ஆக்கிரமிக்காமல் இருக்கவும், அறநிலையத்துறைக்கு சொந்தமான அசையா சொத்துக்களை பாதுகாப்பாக இருக்கவும் இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன' என்றனர்.