நாகர்கோவில்:கொல்லங்கோடு அருகே கைதான ஆபாச பாதிரியார், ஒரே வீட்டில் தாய், மகள், மருமகளுடன் 'வாட்ஸ் ஆப்' மூலம் 'சாட்டிங்' செய்தது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சிறையில் உள்ள அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக தன்னை வேறு சிறைக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ, 29.
நர்சிங் மாணவி அளித்த பாலியல் தொந்தரவு புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். பல பெண்களுடன் அவர் ஆபாசமாக இருக்கும் படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாயின. இதுவரை, நான்கு பெண்கள், பாதிரியார் மீது புகார் செய்துள்ளனர்.
இதற்கிடையில், ஒரு கான்ட்ராக்டரின் மனைவி, மகள், மருமகள் என மூவரிடம் ஒரே நேரத்தில் பழகி, ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் மற்றொருவருடன் அந்த பாதிரியார் வாட்ஸ் ஆப் மூலம் ஆபாச 'சாட்டிங்' செய்தது தெரிய வந்துள்ளது.
நாகர்கோவில் சிறையில் உள்ள பாதிரியார் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு சிறைக்கு மாற்ற அவர் கோரிஉள்ளார்.
பாதிரியாரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 11 'சிம்' கார்டுகள் யார் பெயரில் பெறப்பட்டது எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.
எஸ்.பி., ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், ''இவ்வழக்கில், குற்றப்பத்திரிகை இரு வாரங்களுக்குள் தாக்கல் செய்யப்படும். ஆபாச படங்களை வெளியிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.