திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் அலுவலகத்தில், அரிவாளுடன் நுழைந்து ஊழியர்களை வெட்ட முயன்ற, போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று பகல், 12:40 மணிக்கு, அரிவாளுடன், தெற்கு கோபுரம் வழியாக, பிரம்ம தீர்த்தகுளம் எதிரிலுள்ள கோவில் அலுவலக அறைக்குள், குடிபோதையில் வாலிபர் நுழைந்தார்.
கோவில் இணை ஆணையர் குமரேசன் அறைக்குள் சென்று, அங்குள்ள நாற்காலியில் அமர்ந்து, ரவுடி போல அரிவாளை சுழற்றினார். தடுக்க முயன்ற ஊழியர்களை அரிவாளால் தாக்க முயன்றார்.
மேலும், அலுவலகத்திலுள்ள அனைத்து கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினார். அச்சத்தில் ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
தகவலின்படி கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு வந்ததும், வாலிபர் தப்பியோட முயன்று, அங்கிருந்த கூரை மீது ஏறினார். அப்போது கூரை பிய்ந்து கீழே விழுந்ததில், அவரது காலில் முறிவு ஏற்பட்டது.
அவரை மடக்கி பிடித்த போலீசார், அவருடன் வந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில், பெங்களூருவை சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் ஜெனீபர், 23, உடன் வந்தவர் அவரது ஆண் நண்பர் பிரித்தம், 30, என்பது தெரிந்தது.
இருவரும் கண்ணமடை காப்புக்காட்டில் போதையில் சுற்றித் திரிந்தபோது, வனத்துறையினர் பிடிக்க முயன்றதால், அவ்வழியாக பைக்கில் வந்தவரை தாக்கி தள்ளிவிட்டு, அந்த பைக்கில் தப்பி, கோவிலில் நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
அந்த வாலிபரிடம் அரிவாள் எப்படி கிடைத்தது உள்ளிட்ட விபரங்களை, திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.