கோவை:கோவை, சிங்காநல்லுாரைச் சேர்ந்தவர், 26 வயது திருமணமாகாத பெண், தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார். இவருக்கு, திருமண தகவல் மையம் மூலம் ஒரு வாலிபர் அறிமுகமானார்.
அவர், தன் பெயர் ஜாபர் இப்ராஹிம், அமெரிக்காவில் டாக்டராக பணி புரிவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் அந்த நபர், மொபைல் போனில் அந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்டார்.
அப்போது, தான் டில்லி விமான நிலையத்தில், 5 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களுடன் இருப்பதாகவும், அதை இந்திய பணமாக மாற்ற, 19.50 லட்சம் ரூபாய் வரியாக செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
அந்த பணத்தை கொடுத்தால், கோவை வந்து திரும்ப கொடுத்து விடுவதாகவும் கூறினார்.
அதை உண்மை என நம்பிய இளம்பெண், அந்த நபர் சொன்ன வங்கி கணக்கில், 19.50 லட்சம் ரூபாயை செலுத்தினார்.
அதன் பின், அந்த நபரின் மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டதை அறிந்து, அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.