திருநெல்வேலி:நெல்லையில் வீட்டில் ரூ. ௨௮ லட்சம் ரூபாய் சிக்கியதால் தாசில்தார், அவரது மகன் உட்பட மூன்று பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ௩௧௮ ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லை, கங்கைகொண்டான் 'சிப்காட்' நிலஎடுப்பு தாசில்தாராக பணியாற்றுபவர் சந்திரன், ௫௭. இவரது வீடு பாளை., கே.டி.சி., நகரில் உள்ளது. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம், தாசில்தார் சந்திரன் வீட்டில் சோதனை நடத்தினர்.
அதே பகுதியில் உள்ள அவரது மகள் சுகன்யா வீடு, துாத்துக்குடியில் உள்ள மகன் இசக்கிமுத்து வீடு, அவரது கம்பெனியிலும் சோதனை நடந்தது.
இந்த சோதனையில் தாசில்தார் சந்திரன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ௨௮ லட்சம் ரூபாய்; ௩௧௮ ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக, தாசில்தார் சந்திரன், மகன் இசக்கிமுத்து, மருமகள் ஆனந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.