திண்டிவனம், : புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு, அதிவேக விலை உயர்ந்த பைக்குகளில், கள்ளச்சாராயம் கடத்துபவர்களை பிடிக்க முடியாமல் விழுப்புரம் மாவட்ட போலீசார் திணறி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம், தமிழகப்பகுதியுடன் பூகோள ரீதியாக பின்னிப் பிணைந்துள்ளது. குறிப்பாக கடலுார் , விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மாநில எல்லையில் அமைந்துள்ளன.
'சரக்கு'க்கு பெயர் பெற்ற புதுச்சேரியில், ஏராளமான மதுபானக் கடைகள் வரிசை கட்டி அமைந்துள்ளது. இது மட்டுமின்றி, புதுச்சேரி மாநிலத்தில் கள்ளு மற்றும் சாராயக்கடைகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
புதுச்சேரி 'சரக்கு' என்றாலே தனி மவுசு உண்டு. புதுச்சேரியில் மது அருந்துவதற்கு, வெளி மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பது வழக்கம். கலால் துறை மூலம் புதுச்சேரி அரசுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் தயாரிக்கப்படும் சாராயம், தமிழகப் பகுதியில் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது.
குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில், கிராமப்புறங்களில் முட்டுச்சந்து முதல் முட்புதர்கள் வரை கள்ளச்சாராயம் விற்பனை கொடிகட்டி பறக்கிறது.
புதுச்சேரி எல்லையில் உள்ள திருக்கனுார், மண்ணாடிப்பட்டு, மணலிப்பட்டு, சேதராப்பட்டு, சந்தைபுதுக்குப்பம், சுத்துக்கேணி ஆகிய பகுதிகளில் இருந்து தமிழகப்பகுதிக்கு சாராயம் கடத்தப் படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் வானுார் , மரக்காணம், கிளியனுார், மயிலம், திண்டிவனம் போன்ற பகுதிகளிலும், விக்கிரவாண்டி, வளவனுார் , கோலியனுார் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளிலும் சாராயம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.கடந்த காலங்களில், கார், வேன்களில் சாராய மூட்டைகள் கடத்தப்பட்டு வந்ததால், போலீசார் சோதனையில் சுலபமாக சிக்கி வந்தனர்.
அதனால் தற்போது போலீசாருக்கு சந்தேகம் வராத வகையில், டூ வீலர்களில் மூட்டை போல கடத்திச் செல்கின்றனர்.
குறிப்பாக, ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சத்திற்கும் அதிகம் விலை உள்ள ஆர்ஒன்5, ஹங்க், அப்பாச்சி, ஹிமாலயா போன்ற அதிவேகமாக செல்லக்கூடிய உயர்ரக பைக்குகளில், சாராய மூட்டைகளை அடுக்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்து விடுகின்றனர்.
கடந்த மாதம் புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலை, தென்கோடிப்பாக்கம் அருகே பைக்கில் சாராயம் கடத்தி வந்த 27 வயது இளைஞர், டிராக்டரில் மோதி உயிரிழந்தார்.
கடந்த 20ம் தேதி இரவு, வானுார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட குன்னம் கிராமத்தில் எஸ்.பி., தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சத்யானந்தன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக 6 மூட்டைகளில், 400 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை, ஆர்ஒன்5, பல்சர், ஹங்க் ஆகிய மூன்று பைக்குகளில் கடத்தி வந்த நபர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். பைக்குகளில் வந்தவர்கள், சாராய மூட்டைகளை போட்டு விட்டு தப்பிச் சென்றனர்.
புதுச்சேரி- திண்டிவனம் பைபாஸ் சாலையில், கிளியனுார் செக்போஸ்ட்டில், 24 மணி நேரமும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அதே வழியாக பைக்கில் அசுர வேகத்தில் சாராயம் கடத்தி செல்லும் நபர்களை போலீசார் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
கடத்தல் நபர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றாலும், கீழே விழுந்து ஏதாவது விபத்து நேரிடுமோ என்ற அச்சத்தில் மவுனமாக இருந்து விடுகின்றனர்.
புதுச்சேரியில் உள்ள சாராய வியாபாரிகள், தமிழக கிராமப் பகுதியில் உள்ள வியாபாரிகளுடன் சேர்ந்து 'மெகா திட்டம்' போட்டு, இளைஞர்களை பயன்படுத்தி, உயர் ரக பைக்குகளில் தினந்தோறும் சாராயம் கடத்தலை கனகச்சிதமாக அரங்கேற்றி வருகின்றனர்.
இவர்களை பிடிக்க முடியாமல் விழுப்புரம் மாவட்ட போலீசார் திணறி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் சாராயம் கடத்தும் நபர்கள், 'வலிமை' சினிமா பாணியில், அதிவேகமாக பைக்குகள் ஓட்டக்கூடிய நபராகவும், 20 முதல் 25 வயதுடைய இளைஞர்களே அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக, படித்து வேலை கிடைக்காத இளைஞர்கள், கல்லுாரி படிக்கும் மாணவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது போன்ற செயலில் இளைஞர்களை வியாபாரிகள் பயன்படுத்தினால், அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.எனவே, இவ்வாறு கடத்தலில் ஈடுபடும் புதுச்சேரி மற்றும் தமிழக சாராய வியாபாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க, இரு மாநில போலீசாரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.