கடலுார், : வடலுார் அருகே குழந்தை கடத்தலில் கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர் உட்பட இரு பெண்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
கடலுார் மாவட்டம், வடலுாரில் குழந்தை கடத்தி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வடலுார் போலீசார் வழக்கு பதிந்து, வடலுாரை சேர்ந்த சித்த மருத்துவர் மெகருன்னிசா, 67, வடலுார் அருள்முருகன் மனைவி சுடர்விழி, 32; கீரப்பாளையத்தை சேர்ந்த கஜேந்திரன் மனைவி ஷீலா, 37; சீர்காழி ஆனந்தன், வடலுார் ஆனந்தன், நந்தினி ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
அவர்கள் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மெகருன்னிசா, ஷீலா ஆகியோர் குழந்தை கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாலும், அவர்களின் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக, குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டருக்கு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரை செய்தார்.
கலெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டதை தொடர்ந்து, மெகருன்னிசா, ஷீலா ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.