கச்சிராயபாளையம், : கள்ளக்குறிச்சி அருகே இன்ஜினியர் வீட்டின் பூட்டை உடைத்து எட்டு சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த பரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செந்தில்குமார், 37; அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். அவரது தாய் மற்றும் மனைவி, குழந்தைகள் கள்ளக்குறிச்சி கே. பி.ஆர்., நகரில் வசிக்கின்றனர். இதனால் பரிகம் கிராமத்தில் உள்ள வீடு பூட்டியே கிடந்தது.
இந்நிலையில், நேற்று பகல் 2:00 மணியளவில் செந்தில்குமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வீட்டிற்கு சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த எட்டு சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
மேலும் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த நான்கு சி.சி.டிவி., கேமராக்களை உடைத்து எறிந்ததுடன், ஹார்ட் டிஸ்கை பெயர்த்து மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.