விக்கிரவாண்டி, : குண்டலபுலியூர் காப்பக விவகாரத்தில் மனித உரிமை ஆணையக் குழு உறுப்பினர்கள் விசாரணை நடத்தி ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் குண்டலபுலியூர் கிராமத்தில் 'நல்ல சமேரியர் டிரஸ்ட் அனுமதியின்றி நடத்திய காப்பகம் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.
கடந்த பிப்ரவரி 10ம் தேதி காப்பகத்தை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள், முறைகேடுகளை உறுதி செய்து, காப்பக நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியாஜூபின் ஆகியோர் மீது வழக்கு பதிந்து 9 பேரை கைது செய்தனர். காப்பகத்திலிருந்து 143 பேர் மீட்கப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி, போலீசார் விசாரித்து வருகின்றனர். தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாகவே முன்வந்து காப்பகம் குறித்து விசாரணை செய்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் தேசிய மனித உரிமை ஆணைய குழு உறுப்பினர்கள், காப்பகத்திலிருந்து மீட்கப்பட்டு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 6 பெண்கள் உட்பட 20 பேரிடம் ரகசிய விசாரணை நடத்தினர்.
முதல் நாளில் இரண்டு பேரிடம் நீண்ட நேரம் விசாரணை செய்த அதிகாரிகள், நேற்று மீண்டும் மருத்துவமனையில் விசாரணையை துவக்கினர்.
ஆணைய உறுப்பினர்கள் பட்டில் கேட்டன் பலிராம், மோனியா உப்பல், ஏக்தா பக்விக்தா ,பிஜூவ் ஆகியோர், காலை 10.00 மணிக்கு குண்டலபுலியூர் காப்பகத்தில் ஆய்வு செய்தனர்.
4 ஏக்கர்.07 சென்ட் பரபப்பளவில் அமைந்துள்ள காப்பகத்தின் நில உரிமை பட்டா யார் பெயரில் உள்ளது என்பது குறித்து தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னனிடம் விசாரணை செய்தனர்.
நிலத்தை கிரயம் கொடுத்த தட்சிணாமூர்த்தி, அவரது மகன் பாலு பெயரில் உள்ளது தெரிய வந்தது.
ஏன் பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் காப்பகம் நடத்தினார்கள் என நில உரிமையாளர்களான பாலு, அவரது மனைவி குணலட்சுமி, தாய் முத்துலட்சுமி ஆகியோரிடம் விசாரணை செய்தனர்.
காப்பகத்திலுள்ள அறைகளை பார்வையிட்ட போது அங்குள்ள 'டார்க் ரூமை' பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த இருட்டறையில் மனநலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகளை அடித்து சித்ரவதை செய்தது ஏற்கனவே விசாரணையில் தெரிய வந்ததால், அந்த அறையை 15 நிமிடத்திற்கு மேலாக பார்வையிட்டனர். பின் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அறைகளை பார்வையிட்டனர்.
தும்பூர் கிராமத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி நாகராஜ், 'எனது இரண்டாவது மனைவி தேவி,28; என்பவரை கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் காப்பகத்தில் சேர்த்தேன். பின்னர் கரும்பு வெட்ட இரு குழந்தைகளுடன் மதுரைக்கு சென்று விட்டேன். திரும்பி வந்து பார்த்த போது தனது மனைவி தேவி குறித்து ஜூபின் பேபி சரியான பதில் கூறவில்லை' என ஆணைய குழு உறுப்பினர்களிடம் புகார் கூறினார்.
அவரை, போலீசில் புகார் செய்யுமாறு அறிவுறுத்தி அனுப்பினர். அதையடுத்து காப்பகத்திலிருந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
விசாரணைக்கு பிறகு 11.35 மணியளவில் ஆணைய குழுவினர் கோட்டகுப்பத்திலுள்ள காப்பகத்தினை பார்வையிட புறப்பட்டு சென்றனர்.
செஞ்சி டி.எஸ்.பி., பிரியதர்ஷினி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கவேலு, தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், இன்ஸ்பெக்டர்கள் ஜோதி, சேகர், சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், வருவாய் ஆய்வாளர் நாகராஜன், வி.ஏ.ஓ., மணி பாலன் ஆகியோர் உடனிருந்தனர்.