சிதம்பரம், : பா.ஜ.,வின் உட்கட்சி விவகாரத்தால் அண்ணாமலை விரக்தியாக பேசுகிறார் என, காங்., மாநில தலைவர் அழகிரி கூறினார்.
இதுகுறித்து சிதம்பரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக அரசின் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் சிறப்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆடம்பரம் மற்றும் வெற்று அறிவிப்புகள் இல்லாமல் வளர்ச்சியை நோக்கி இரண்டு பட்ஜெட்டுகளும் தாக்கல் செய்யப்பட்டது. நிதி பற்றாக்குறையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கட்டுப்படுத்தி உள்ளார், அதற்காக அவரை காங்., பாராட்டுகிறது.
தமிழக முதல்வர் வேளாண் வளர்ச்சியில் காட்டும் ஆர்வத்திற்கு எடுத்துக்காட்டாக வேளாண் பட்ஜெட் உள்ளது. விவசாய பொருட்களின் கொள்முதல் விலையை அதிகப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.
எதிர்க்கட்சிகளை லோக்சபாவில் பேசவிடவில்லை என ராகுல் பேசினார். ஜனநாயகமே தவறு என்று அவர் கூறவில்லை. பெருமைமிகு ஜனநாயகத்தை பா.ஜ., அரசு சிதைப்பதாக சொன்னார். இது இந்தியாவிற்கு எதிரான கருத்து அல்ல.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விரக்தியுடன் பேசுவதற்கு உள்கட்சி விவகாரம் தான் காரணம்.
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர மாட்டேன் என அண்ணாமலை சொல்கிறார். ஆனால் வானதி சீனிவாசன், முரளிதரராவ், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்கிறார்கள்.
என்.எல்.சி., நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதில் தவறில்லை. அதற்குரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். ஆனால் இன்றைக்கு நடைமுறை அப்படி அல்ல. அதனால் தான் முரண்பாடுகள் உள்ளது. தமிழக முதல்வர் கவனம் செலுத்தி சரி செய்வார்.
இவ்வாறு அழகிரி கூறினார்.