பழநி--பழநி நகராட்சி 17வது வார்டில் தெருநாய் தொல்லையால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை தொடர்கிறது.
அண்ணா நகர், திருவள்ளுவர் சாலை, ஆர்.ஏப்.ரோடு, மாவட்ட கல்வி அலுவலங்கள், மருத்துவமனைகள், எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ளடக்கிய இந்த வார்டில் உள்ளஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிக மார்க்கெட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நகரின் முக்கிய பகுதியாக இருப்பதால் குப்பை அகற்றுதல் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பது அவசியமாகிறது . இங்குள்ள முக்கிய வழி பாதைகளான கல்லறை தோட்டம் அருகில் உள்ள சந்து, பி.பி.என். வணிக வளாகம் அருகில் உள்ள சந்துகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட வேண்டியுள்ளது. வார்டிற்கு செல்லும் வழியில் உள்ள உழவர் சந்தை முன்புறம் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
தெரு நாய் தொல்லை மிக அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். வாகன ஓட்டிகளை துரத்துவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா ,பாதாள சாக்கடை திட்டம் ஆகியவற்றை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்றனர் வார்டு மக்கள்.
பயத்துடன் பயணிப்பு
பாலமுருகன், தொழில் முனைவோர், திருவள்ளுவர் கிராஸ் வீதி: கொசு தொல்லை அதிகம் உள்ளது. அண்ணா நகர் வீதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளதால் இப்பகுதியில் மக்கள் அச்சத்துடன் நடமாடிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. முதியவர்கள், சிறுவர்கள் சிரமம் அடைகின்றனர் .வாகன ஓட்டிகள் பயத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.
தேவை கேமரா
சிவக்குமார், தனியார் கணக்காளர், அண்ணா நகர்: சாக்கடை அடைப்புகளை தூர்வார வேண்டும். அண்ணா நகர் சாலைகள், திருவள்ளுவர் கிராஸ் ரோட்டில் வெளி நபர்கள் நடமாட்டம் இருப்பதால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீசார் கண்காணிப்பில் கொண்டு வர வேண்டும்.
வேண்டாம் மார்க்கெட்
செல்வி, குடும்பத் தலைவி, அண்ணா நகர்: காந்தி மாற்று மார்க்கெட்டை இடமாற்றம் செய்து தற்காலிகமாக 17 வது வார்டு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அமைக்க திட்டமிட்டுள்ளனர் .இதனால் வெளி நபர்களின் வருகை இப்பகுதியில் அதிகரிக்கும் . வார்டில் துாய்மை பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும்.
நடவடிக்கை உண்டு
செபாஸ்டின், கவுன்சிலர், (தி.மு.க.,): மக்கள் குறைகள் அனைத்தும் உடனடியாக சரி செய்யப்படுகிறது. குப்பை முறையாக அகற்றப்படுகிறது.
சாக்கடை குறித்த பிரச்னையை எடுத்து கூறி சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தெரு நாய்கள் தொல்லை குறித்து நகராட்சியில் எடுத்துரைத்துள்ளேன்.
விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் .கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை திட்டத்தை அரசு விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது.
தற்காலிக மார்க்கெட் இப்பகுதியில் அமைக்கும் போது இலவச கழிப்பறை, குடிநீர், பாதுகாப்பு ஏற்பாடுகள், துாய்மை பணியாளர்கள் தேவைகள் குறித்து எடுத்துரைக்க உள்ளேன்,என்றார்.