கோவை: அ.தி.மு.க. ஆட்சியின்போது குறைக்கப்பட்ட, 33 சதவீத வழிகாட்டி மதிப்பைக் கூட்டியுள்ள தமிழக அரசு, அப்போது 1லிருந்து 4 சதவீதமாகக் கூட்டப்பட்ட பதிவுக் கட்டணத்தை, இரண்டு சதவீதமாக மட்டுமே குறைத்துள்ளது.
தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறையாக பதிவுத்துறை உள்ளது. ஆனால் நகர்ப்புறங்களில், நிலத்தின் சந்தை மதிப்பைக் காட்டிலும், வழிகாட்டி மதிப்பு மிகவும் குறைவு. பெருநகரங்களையொட்டியுள்ள புறநகர் பகுதிகளில், வழிகாட்டி மதிப்பை விட, சந்தை மதிப்பு 10 மடங்கு அதிகம். இதன் காரணமாக, பத்திரப்பதிவுகளில் கருப்புப் பணம் பெருமளவு கை மாறுகிறது.
பழனிசாமி முதல்வராக இருந்தபோது, 2017 ஜூனில், அரசாணை வெளியிடப்பட்டு, வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டது; அதற்குப் பதிலாக, ஒரு சதவீதமாக இருந்த பதிவுக்கட்டணம், 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால், சந்தை மதிப்புக்கும், வழிகாட்டி மதிப்புக்குமான இடைவெளி மேலும் அதிகரித்தது.
கடந்த 2016 நவம்பரில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. அப்போது, பல ஆயிரம் கோடி கருப்புப் பணம் வைத்திருந்த அன்றைய தமிழக அமைச்சர்கள் பலரும், அந்தப் பணத்தை வைத்து, தமிழகம் முழுவதும் ஏராளமான நிலங்களைப் பேசி முடித்து ஒப்பந்தம் போட்டிருந்தனர். அந்த நிலங்களைப் பத்திரப்பதிவு செய்வதற்காகவும், அரசின் வளர்ச்சிப் பணிகளுக்காக, நில ஆர்ஜிதத்துக்குத் தரப்படும் இழப்பீடைக் குறைக்கவும், வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கூடுதல் செலவு
கடந்த 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் உயர்த்தியும், பதிவுக்கட்டணத்தை நான்கிலிருந்து 2 சதவீதமாகக் குறைத்தும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு, எல்லாத் தரப்பிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கருப்புப் பணப்புழக்கத்தைக் குறைத்து, அரசின் வருவாயை அதிகரிக்க, தற்போதுள்ள சந்தை மதிப்புக்கேற்ப, வழிகாட்டி மதிப்பை உயர்த்துவது அவசியம். இப்போதும் கடந்த 2017ல் குறைத்த 33 சதவீதம் வழிகாட்டி மதிப்புதான் மீண்டும் உயர்த்தப்படுகிறது. அதேநேரத்தில், அப்போது ஒன்றிலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்ட பதிவுக்கட்டணம், இப்போது 2 சதவீதமாக மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, மக்களின் சுமையைக் குறைத்திருப்பதைப் போல் இருந்தாலும், உண்மையில் பத்திரப்பதிவுக்கு முன்பை விட, கூடுதல் தொகையையே செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, தற்போது 666 ரூபாயாக உள்ள ஒரு சதுர அடி வழிகாட்டி மதிப்பு, இனி ஆயிரம் ரூபாயாக உயரும். ஒரு சென்ட் நிலத்துக்கு இதற்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் சேர்த்து, பதிவுச் செலவைக் கணக்கிட்டால், ரூ.7,092 அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும்.
இனிமேல், அரசு அமைத்துள்ள குழு ஆய்வு செய்து, நிலத்திற்கு புதிய வழிகாட்டி மதிப்பை பரிந்துரை செய்தாலும், பதிவுக் கட்டணம் இதே 2 சதவீதமாகவே தொடர வாய்ப்புள்ளது. முன்பு குறைத்த வழிகாட்டி மதிப்பைக் கூட்டிய தமிழக அரசு, முந்தைய அரசு மூன்று சதவீதம் கூட்டிய பதிவுக்கட்டணத்தை மீண்டும் ஒரு சதவீதமாகக் குறைப்பது அவசியம்.