மதுரை : தஞ்சாவூரில் தனியார் நிறுவனம் மூலம் முதலீட்டாளர்களிடம் ரூ.1000 கோடி மோசடி செய்த வழக்கில் 3 பேரின் முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.மனுதாரர் தரப்பு: வழக்கில் 2வது எதிரியாக சேர்க்கப்பட்டவர் (கமாலுதீன்) நிறுவன உரிமையாளர். அவர் இறந்துவிட்டார். குற்றத்தில் மனுதாரர்கள் ஈடுபடவில்லை. வழக்கில் தொடர்புடைய மற்றவர்களின் செயலுக்கு மனுதாரர்கள் பொறுப்பல்ல. மனுதாரர்கள் எந்தத் தொகையையும் வசூலிக்கவில்லை.
கமாலுதீன் செய்த தவறுக்காக மனுதாரர்களை தண்டிக்க முடியாது. மனுதாரர்களின் பெயரில் எந்த சொத்தும் இல்லை. மனுதாரர்கள் அளித்த விபரங்களின்படி இதுவரை 50 பஸ்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 22 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மனுதாரர்களிடம் போலீசார் விசாரிக்க தேவையில்லை.
புகார்தாரர் தரப்பு: மனுதாரர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களும் அதே தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மனுதாரர்களின் துாண்டுதல் பேரில் டெபாசிட் வசூல் நடந்துள்ளது. இதனால் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து எந்தத் தொகையும் மீட்கப்படவில்லை. சொத்துக்களை பறிமுதல் செய்யவில்லை. முன்ஜாமின் அனுமதிக்கக்கூடாது.
தமிழக அரசு தரப்பு: வழக்கில் தொடர்புடையோர் ரூ.1000 கோடி மோசடி செய்துள்ளனர். ரூ.22 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை ஜப்தி செய்ய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. 57 ஆம்னி பஸ்கள், சில கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மனுதாரர்கள் மூலமாக பலர் டெபாசிட் செய்துள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: பலரிடம் ரூ.1000 கோடி டெபாசிட் வசூலித்து, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளனர். 2020 பிப்ரவரி வரை டெபாசிட்தாரர்களுக்குரிய தொகை வழங்கப்பட்டுள்ளது. பின் தொகையை வழங்கவில்லை.
மனுதாரர்கள் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு எதிராக கடுமையான குற்றத்தை செய்து ரூ.1000 கோடி மோசடி செய்துள்ளனர். காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.