கோவை: துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், இரண்டாம் வகுப்பு மாணவரை அடித்த ஆசிரியரை, குழந்தையின் பெற்றோர் அடிக்கும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மாணவர்களை பிரம்பால் ஆசிரியர்கள் கண்டிக்க தடை நீடிப்பதால், ஒழுங்கீனம், கீழ்ப்படியாமை அதிகரித்து வருகிறது. தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆசிரியர்கள், மாணவர்களை எப்படி கையாள்வதென தெரியாமல் கைகளை பிசைகின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம், கீழநம்பிபுரம் இந்து தொடக்கப்பள்ளியில், எண்ணும் எழுத்தும் நிகழ்ச்சிக்குப் பின், மாணவர்களை ஒருங்கிணைத்த ஆசிரியர் ஒருவர், இரண்டாம் வகுப்பு படிக்கும், மாணவர் ஒருவரை கன்னத்தில் அடித்ததாகவும், வலி தாங்க முடியாமல், மாணவர் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதை கண்டித்து, குறிப்பிட்ட மாணவரின் பெற்றோர் மற்றும் தாத்தா ஆகிய மூவர் பள்ளிக்கு வந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியரை அடித்து, மைதானத்தில் கீழே தள்ளும் காட்சிகள், ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர் அளித்த புகாரின் பேரில், ஆசிரியரை தாக்கிய மூவர், கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், பள்ளி வளாகத்திற்குள்ளே ஆசிரியரை அடித்தது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. பணி பாதுகாப்பு சட்டம் இயற்றாததால்தான், ஆசிரியர்களின் நிலை படுமோசமாக மாறி வருவதாக, பலரும் ஆதங்கப்படுகின்றனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு கூறுகையில், ''பள்ளி வளாகத்திற்குள்ளே வந்து, பணியில் இருக்கும் ஆசிரியரை சக மாணவர்கள் முன்னிலையில், பெற்றோர் ஒருமையில் பேசுகின்றனர்; திடீரென அடிக்கின்றனர்.
இது போன்ற செயல்பாடுகளால், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. தவறு செய்த மாணவரை கண்டிக்க கூடாதென்றால், பள்ளிக்கூடங்கள் நடத்தி, நன்னெறியையும், ஒழுக்கத்தையும் போதிக்கவே முடியாது.
வெறுமனே பாடத்தை மட்டும் நடத்துவது தான், ஆசிரியர்களின் பணியா என்ற கேள்வி எழுகிறது. ஆசிரியரை தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டாலும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதை கண்டித்து, விரைவில் போராட்டம் அறிவிக்க, முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.
மாணவரை அடித்தது சரியா?
குழந்தைகள் மற்றும் பொது மனநல ஆலோசகர் கவிதா ஜனார்த்தனன் கூறியதாவது:
இரண்டாம் வகுப்பு படிக்கும், மாணவரை கன்னத்தில் அடித்ததாக, வீடியோவில் காட்டப்படுகிறது. எந்த பெற்றோராக இருந்தாலும், ஆத்திரம் வருவது இயல்புதான்.
இதற்காக ஆசிரியரை அடிக்காமல், கேள்வி எழுப்பியிருந்தால், உரிய ஆசிரியர் தற்போது குற்றவாளியாகி இருப்பார். தொடக்க வகுப்பு குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டுமென, ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். பதின்பருவ மாணவர், ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டால், அடிக்கும் ஆசிரியரை இந்த சமூகம் வரவேற்கிறது. கண்டிப்பை காட்டினால்தான், தவறு செய்யும் மாணவர்கள் திருந்துவர்.
சமீபத்தில் தர்மபுரி மாவட்டம், மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், செய்முறை தேர்வுக்கு பின், வகுப்பறையை சேதப்படுத்திய மாணவர்கள் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால் சில ஆசிரியர்கள், மாணவர்களை சரியாக கையாளாமல், அடிப்பது தொடர்கிறது. தவறே செய்தாலும், கண்டிப்பை வெளிப்படுத்தும் முறையில்தான், மாணவர்கள் மனம் திருந்துவர்.
களங்கப்படுத்தலாமா?
ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'என்னதான் இருந்தாலும், பாடம் கற்பிக்கும் ஆசிரியரை, அவரிடம் கற்கும் மாணவர்கள் முன்னிலையில், பெற்றோர் தாக்குவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதன் வாயிலாக, தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர், பெரும் துரோகம் செய்கின்றனர்.குழந்தை ஒழுக்க நெறி தவறுவதையும், ஆசிரியர் மீது தாக்குதல் நடத்துவதையும் ஊக்குவிப்பது தொடர்ந்தால், நாளைய சமுதாயத்துக்கு ஒரு சிறந்த குடிமகனை, அந்த பெற்றோரால் அளிக்க முடியாது. இதை, ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டியது அவசியம்' என்று வேதனையுடன் தெரிவித்தனர்.