புதுக்கோட்டை : 'புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, வேளாண் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பொதுமக்கள் நலன் கருதி அபாயகரமான மோனோ குரோட்டோபாஸ், ப்ரோபெனோபோஸ், அசிபேட், குளோர் பைரிபாஸ், ப்ரோபெனோ போஸ்10 சைபர்மெத்ன், குளோர்பைரிபாஸ் 10 சைபர்மெத்ரின் ஆகிய ஆறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த தற்காலிக தடை உள்ளது.
இந்த தற்காலிக தடை, மார்ச் 1ம் தேதி முதல் 60 நாட்களுக்கு உள்ளது. மேலும், 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் எலி விஷ மருந்தை பயன்படுத்த நிரந்தர தடை விதித்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.
இத்தகைய பூச்சிக் கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பூச்சிக் கொல்லி மருந்து விற்பனையாளர்கள், 60 நாட்களுக்கு இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ தடை விதிக்கப்படுகிறது.
ஆய்வின்போது, தடை யை மீறியது கண்டறியப்பட்டாலோ அல்லது புகார் வரப்பெற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.