ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி மூன்று மையங்களில் ஏப்.,10ல் துவங்க உள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த, 13ல், பிளஸ் 1 பொதுத்தேர்வு, 14ல் துவங்கி நடக்கிறது. பிளஸ் 2 தேர்வு ஏப்.,3, பிளஸ் 1 தேர்வு ஏப்.,4ல் நிறைவு பெறுகிறது. பிளஸ் 2 தேர்வை, 24 ஆயிரத்து, 894 பேர் எழுதுகின்றனர். பிளஸ் 1 தேர்வை, 23 ஆயிரத்து, 256 பேர் எழுதுகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 விடைத்தாள் திருத்துவதற்கு ஈரோடு மாமரத்துப்பாளையம் இந்து கல்வி நிலையம், கொங்கம்பாளையம் எஸ்.வி.என். பள்ளி, கோபி பாரதி வித்யாலயா பள்ளி என, மூன்று மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்.,10 முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்க உள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு நிறைவடைந்ததும், பாதுகாப்பு மையத்தில் உள்ள விடைத்தாள்கள் பாட வாரியாக பிரிக்கப்பட்டு, ஒன்றோடு ஒன்றோடு கலந்து வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். பின்னர், பிற மாவட்ட விடைத்தாள்கள் ஈரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மூன்று திருத்தும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு, அந்த விடைத்தாள்கள் பாட வாரியாக பிரித்து வைக்கப்படும்.
முதலில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.,10 முதல் துவங்கும். தொடர்ந்து பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும். விடைத்தாள் மதிப்பெண் செய்தவுடன், அதை கணினியில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.