ஈரோடு: ஈரோடு யூனியன், எலவமலை பஞ்., மூலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, கிராம மக்களிடம் குறைகள் கேட்டறிந்து, சபை செயல்பாடுகளை ஆய்வு செய்து பேசியதாவது:
ஊரக பகுதியில் மழை நீரை சேமிப்பதில் முனைப்பு காட்ட வேண்டும். மக்களே, மரக்கன்றுகளை வளர்த்து சுற்றுச்சூழலை காக்க வேண்டும். கிராம பகுதியில் ஏ.டி.எஸ்., கொசு பரவலை கட்டுப்படுத்தி, டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க வேண்டும். சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும். மேல் நிலை, தரை மட்ட நீர்தேக்க தொட்டியை மாதம், இரு முறை சுத்தம் செய்து, தகுந்த அளவு குளோரின் கலந்து குடிநீர் வினியோகிக்க வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
யூனியன் தலைவர் பிரகாஷ், ஆர்.டி.ஓ., சதீஸ்குமார், வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி, தோட்டக்கலை துணை இயக்குனர் மரகதமணி உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல மாவட்ட அளவில், 225 பஞ்.,களிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது.