நாய்கள் நடமாட்டம்
காத்திருக்கும் விபத்து
கோபி-புதுவள்ளியம்பாளையம் பிரிவு வரை, தெருநாய்கள் நடமாட்டத்தால், வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர்.
கோபி அருகே கரட்டடிபாளையம்-புதுவள்ளியாம்பாளையம் பிரிவு வரை, சாலையோரத்தில், ஏராளமான இறைச்சி கடைகள் செயல்படுகின்றன. இதனால், தெருநாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அதிகாலை, இரவு நேரத்தில் சாலையின் குறுக்கே தாறுமாறாக தெருநாய்கள் ஓடுகின்றன. இதனால், இருளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அல்லது கோபி யூனியன் நிர்வாகம், தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிப்காட் அருகே பஸ்கள்
நின்று செல்ல முறையீடு
ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம், பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி தலைமையில் மனு வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:
பெருந்துறை சிப்காட்டில், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளன. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். சிப்காட் வந்து செல்ல போதுமான எண்ணிக்கையில் பஸ் வசதி இல்லை. கோவை, திருப்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும் சாதாரண அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் இங்கு நின்று செல்ல உத்தரவிட வேண்டும். சிப்காட் அருகே, இரு புறமும் நினைவு சின்னமாக பஸ் நிறுத்தம் இருந்தும், பஸ்கள் நிற்காததால், சிரமமாக உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கூலித்தொழிலாளியை
தாக்கிய இருவர் கைது
கோபி அருகே அரசூரை சேர்ந்தவர் கோபால், 32, கூலித்தொழிலாளி; இவரின் உறவினர் கருப்பன், 75, வயது முதிர்வு காரணமாக கடந்த, 20ல், இறந்தார். இவரின் உடலை அடக்கம் செய்ய, 21 காலை 10:30 மணிக்கு தங்க நகர் என்ற இடத்தில் உள்ள மயானத்துக்கு கொண்டு சென்றனர்.
அப்போது அந்த இடத்தில், உடலை அடக்கம் செய்யக்கூடாது எனவும், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருப்பதாகவும், அதே பகுதியை சேர்ந்த குருநாதன், 40, ரங்கசாமி, 40, ஆகியோர் தகராறு செய்து, கோபாலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த கோபால் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடத்துார் போலீசார் விசாரித்து குருநாதன், ரங்கசாமியை நேற்று கைது செய்தனர்.
மக்களுக்கு இடையூறாக
மது அருந்தியவர் கைது
பொதுமக்களுக்கு இடையூறாக அமர்ந்து, மது அருந்தியவர் கைது செய்யப்பட்டார்.
நம்பியூர் அருகே எ.செட்டிபாளையம் பகுதியில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது மாரியம்மன் கோவில் வீதியில் அமர்ந்து, அதே பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி, 31, என்பவர் மக்களுக்கு இடையூறாக மது அருந்தியுள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறையில் இருந்து
2,000 டன் நெல் வருகை
மயிலாடுதுறையில் இருந்து, நேற்று சரக்கு ரயிலின், 42 பெட்டிகளில், 2,000 டன் நெல், மூட்டைகளாக ஈரோடு கூட்ஸ் ஷெட் வந்தது. அவற்றை சுமை தொழிலாளர்கள், ரயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி பொது வினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து, விரைவில் தனியார் அரிசி அரவை ஆலைகளுக்கு நெல் கொண்டு செல்லப்பட்டு அரிசியாக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்னை மரத்தில் தீ விபத்து
ஈரோடு பி.பெ. அக்ரஹாரம், வாணியம்மன் கோவில் வீதியில் காமாட்சி டையிங் கம்பெனி உள்ளது. இங்குள்ள வளாகத்தில், 70 அடி உயர தென்னை மரம் இருந்தது. நள்ளிரவு, திடீரென தென்னை மரத்தின் உச்சியில் தீப்பிடித்து எரிய துவங்கியது. தீயணைப்பு வீரர்கள், 45 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.
டையிங் மில் புகை போக்கியில் வெளியேறிய தீப்பொறி, தென்னை மரத்தின் காய்ந்த சருகுகளில் பட்டு தீப்பிடித்துள்ளது என, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
உலக வன நாள்
விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோடு மாநகராட்சி சார்பில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உலக வனத்தினத்தை முன்னிட்டு, பெரிய சேமூர் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பெரிய சேமூர், கனிராவுத்தர் குளம் உள்ளிட்ட மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மரக்கன்றுகள் நடப்பட்டன. நீர் வளம், வன வளம், காடுகள் பாதுகாப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
பொக்லைன் இயந்திரம்
கவிழ்ந்து டிரைவர் காயம்
புன்செய் புளியம்பட்டி அருகே, பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் லேசான காயத்துடன் தப்பினார்.
புன்செய் புளியம்பட்டி அருகே புங்கம்பள்ளியில், 80 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. தற்போது குளம், நீர்வழி பாதையை பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. தேசிபாளையம் பிரிவு அருகே, நேற்று நீர்வழிப் பாதையை பொக்லைன் இயந்திரம் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அருகே இருந்த கற் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பொக்லைன் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவ்வழியே சென்றவர்கள், டிரைவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புன்செய் புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கொண்டத்து காளியம்மன்
கோவிலில் ஆன்மீக நுால்
கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், தினமும் ஆறு கால பூஜைகள் நடக்கின்றன. அம்மன் சன்னதி எதிரே, 60 அடி நீளத்தில், குண்டம் அமைந்துள்ளது கோவிலின் சிறப்பு. கோவில் ஸ்தல வரலாற்றை, நாடு முழுவதும் கொண்டு செல்ல, அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. எனவே, கோவில் வளாகத்தில் அர்ச்சனை சீட் வழங்கும் பகுதியான, மகா மண்டபத்தில் ஆன்மீக புத்தக விற்பனை நிலையம் துவங்கப்படவுள்ளது. இங்கு கோவில் சிறப்புகளை எடுத்து கூறும் ஸ்தல வரலாறு, பிற ஆன்மீக நுால்கள் விரைவில் விற்பனை செய்யப்படவுள்ளன.
பைக் மீது லாரி மோதி
ஐ.டி. ஊழியர் பலி
பெருந்துறை அருகே, லாரி மோதி ஐ.டி. ஊழியர் பலியானார்.
திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம், சின்னத்தோட்டத்தை சேர்ந்த சண்முகம் மகன் ரமேஷ், 33. இவர், ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். நேற்று தனது, டிவிஎஸ் ஜூபிடர் பைக்கில், ஈரோடு நோக்கி சென்றார். தேசிய நெடுஞ்சாலையில், பெருந்துறை அருகே விஜயமங்கலம் டோல்கேட் அருகே வரும்போது, பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் ரமேஷ் பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரமே ைஷ பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ணாரி அம்மன் கோவில் விழா
தீயணைப்பு வாகனம் நிறுத்த திட்டம்
பண்ணாரி மாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் விழா துவங்கி உள்ளது. வரும், 28ல் கம்பம் நடப்படுகிறது. ஏப்.,4ல் குண்டம் விழா நடக்கிறது. தொடர்ந்து, 10 வரை பூஜை நடக்கிறது. விழா காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்.
இது குறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:
விழாவை முன்னிட்டு ஏப்.,1 முதல் 11 வரை இரு தீயணைப்பு வாகனங்கள், ஒரு சிறிய ரக தீயணைப்பு வாகனம், 1 சூப்பர் ஜெட் பம்ப் ஆகியவை நிரந்தரமாக தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். 45 தீயணைப்பு வீரர்கள் பணியில் இருப்பர். கோவில் வளாகத்தில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.9.56 லட்சத்துக்கு
நிலக்கடலை விற்பனை
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 437 மூட்டை நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 62.39 முதல், 76.90 ரூபாய் வரை விற்பனையானது.
மொத்தம், 13 ஆயிரத்து, 273 கிலோ எடையுள்ள நிலக்கடலை, ஒன்பது லட்சத்து, 56 ஆயிரத்து, 675 ரூபாய்க்கு விற்பனையானது.
மாநகராட்சி சார்பில் உலக தண்ணீர் தினம்
ஈரோடு மாநகராட்சி சார்பில், உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கனிராவுத்தர் குளத்தில் நேற்று நடந்தது. அப்போது, விண்ணின் மழைத்துளி, மண்ணின் உயிர்த்துளி, மழைநீர் நமது உயிர் நீர், மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், மழைநீரை சேகரிப்போம் என, தண்ணீர் சேமிப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மேலும், ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் மூலம் குளங்கள் சீரமைப்பு, மரம் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
மாநகர் மாவட்ட காங்.,
நிர்வாகிகள் கூட்டம்
ஈரோடு மாநகர் மாவட்ட காங்., கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று இரவு மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமையில் நடந்தது.
வரும், 28ல் வைக்கம் போராட்டத்தின் நுாற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. விழாவை பெரிய அளவில் நடத்துவது, மக்களிடம் அதன் நோக்கத்தை கொண்டு சேர்ப்பது என முடிவு செய்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.எம்.பழனிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் ரவி, காந்தி, வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், மாநகர் மாவட்ட துணை தலைவர் ராஜேஷ்ராஜப்பா ஆகியோர் பேசினர்.
இருவருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக, இருவருக்கு கொரோனா தொற்று
ஏற்பட்டது.
ஏற்கனவே சிகிச்சையில் இருந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது, ஏழு பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர்.
நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்
தாராபுரம் அடுத்துள்ள தாளக்கரையை சேர்ந்தவர், 23 வயது இளம் பெண். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் வரும், 27ல், திருமணம் நிச்சயமாகி இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், வயிற்று வலி எனக் கூறியதால், சிகிச்சைக்காக அந்த பெண்ணை அவரது அண்ணன், தாராபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பின்னர், தனது வீட்டுக்கு அண்ணன் சென்ற நிலையில், அவரது தங்கை மருத்துவமனையில் இருந்து மாயமானார்.
தாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உலக தண்ணீர் தினம் அனுசரிப்பு
தாராபுரம் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில், உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்பட்டது.
தாராபுரம் அடுத்துள்ள குறிஞ்சி நகரில், கவுண்டச்சிபுதுார் ஊராட்சி சார்பில், கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலர் பெரியசாமி முன்னிலையில் நடந்த கூட்டத்தில், அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்குவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஈரோட்டில் சவுராஷ்டிரா
வருட பிறப்பு விழா
யுகாதி பண்டிகையின்போது சவுராஷ்டிரா வருட பிறப்பு தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தினத்தில் சவுராஷ்டிரா மக்கள் புத்தாடை அணிந்து, கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்துவர். இதன்படி, 711வது சவுராஷ்டிரா விஜயாப்தம் புத்தாண்டு விழா நேற்று பிறந்தது. ஈரோடு சவுராஷ்டிரா சபை சார்பில், வருட பிறப்பு விழா, கோட்டை பெருமாள் கோவில் வளாக மண்டபத்தில் நடந்தது. சபை தலைவர் ராமர் தலைமை வகித்தார். கஸ்துாரி அரங்கநாதருக்கும், கமலவள்ளி தாயாருக்கும் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். சபை செயலாளர் குருபரன் பஞ்சாங்கம் வாசித்தார். பொருளாளர் சீனிவாசன், இணை செயலாளர் நீலகண்டன், மத்திய சவுராஷ்டிரா சபை துணை தலைவர் வெங்கட்ரமணன், செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாடகை பாக்கி வைத்திருந்த மூன்று கடைகளுக்கு 'சீல்'
ஈரோடு மாநகராட்சியில், 2022- - 2023ம் ஆண்டுக்கான சொத்து வரி, காலியிட வரி, குடிநீர் வரி, வணிக கடைகளுக்கான வாடகை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதில், சொத்து வரி பாக்கி வைத்துள்ளவர்களின் வீட்டின் குடிநீர் இணைப்பினை துண்டித்தும், மாநகராட்சி வணிக கடைகளுக்கான வாடகை பாக்கி வைத்திருந்தால் கடைகளுக்கு பூட்டி சீல் வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான நேதாஜி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள மூன்று கடைகள், வாடகையாக, 97 ஆயிரத்து, 965 ரூபாயை மாநகராட்சிக்கு செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும் செலுத்தாததால், மூன்று கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
பத்ரகாளியம்மன் கோவிலில்
மகிஷாசுரமர்த்தனா நிகழ்வு
அந்தியூர், மார்ச் 23--
அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷாசுரமர்த்தனா நிகழ்வு நடந்தது,
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் பழமை வாய்ந்தது. நடப்பாண்டு கோவில் குண்டம் திருவிழாவிற்கான பூச்சாட்டுதல் கடந்த, 16ல், தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள் நடந்து வருகின்றன. பண்டிகையின் முக்கிய நிகழ்வான மகிஷாசுரமர்த்தனம் என்ற எருமை கிடாய் வெட்டும் நிகழ்வு நேற்று சிறப்புடன் நடந்தது.
முன்னதாக அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி முடிந்து, வாக்கு கொடுத்ததும் எருமை கிடாயை வெட்டி அம்மனுக்கு பலி கொடுத்து, குண்டம் அருகே மூடப்பட்டது. இந்நிகழ்வில் பத்ரகாளியம்மன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்