ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கலெக்டரின் பேச்சுவார்த்தைக்குப்பின், போராட்டத்தை விலக்கி கொண்டனர்.
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன், மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் கடந்த, 20, 21ல் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, 83 தகுதியான மாற்றுத்திறனாளிகள், தகுதி இருந்தும் விடுபட்ட, 17 மாற்றுத்திறனாளிகள் என, 100 பேருக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா கோரி வருகின்றனர். அதில், 33 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிவிட்டு, 67 பேருக்கு வழங்கவில்லை.
இவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பான கோப்புகள், நிலவருவாய் ஆணையரிடம் நிலுவையில் உள்ளதாகவும், அவர் உத்தரவிட்டால் வழங்குவதாக கலெக்டர் தெரிவித்தார். இதனால், தங்களது டூவீலரில் சென்னைக்கு செல்ல மாற்றுத்திறனாளிகள் முடிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நில நிர்வாக ஆணையரிடம் பேசியதால், இம்மாத இறுதிக்குள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளார். எனவே ஏப்., 10ல் விடுபட்டவர்களுக்கு பட்டா வழங்கப்படும். தேவையில்லாமல் சென்னைக்கு சென்று சிரமப்பட வேண்டாம் என, கேட்டு கொண்டதால், தர்ணா போராட்டத்தை விலக்கி கொண்டனர்.